இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்! -திரை விமர்சனம்

இளைஞன் கவுதம் (ஹரிஷ் கல் யாண்) சிறுவயதிலேயே தனது தாய், தன்னைவிட்டுப் பிரிந்த கோபத்தில் விட்டேற்றியான வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). இருவருக் கும் ஏற்படும் பரஸ்பரப் பழக்கம் காதலாக மாறுகிறது. அதேவேளையில் தாயின் மீதான கவுதமின் கோபம் அவனுக்குள் தீவிரமான உளவியல் பிரச்சினையாக உருக் கொள்கிறது.

அனைவரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவன், தன் மீது அன்பு செலுத்துபவர் களைத் தனது உடைமையாகப் பாவிக் கிறான். எனவே தாராவை தனது நிரந்தர உடைமையாக்க முயற்சிக்கிறான். ஆனால், நிதானமாக முடிவு எடுக்கக் கூடிய தாரா, கவுதமின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறாள். அதேவேளையில் அவனை ஒரேயடியாக வெறுக்காமல், காதலிக்கவும் செய்கிறாள். இந்த இரட்டை நிலையால் இரு வரும் இணைந்தார்களா? இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறது ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’.

முரட்டுத்தனமான ஆண், அவனை உயி ருக்கு உயிராக நேசிக்கும் பெண் என்ற கதைக் கருவை பல தமிழ்ப் படங்கள் கையாண்டிருக் கின்றன. ஆனால், இந்தப் படத்தில் நாயக னுக்கு இருக்கும் முரட்டுத்தனத்துக்கு ஒரு வலுவான உளவியல் காரணம் சொல்லப் படுகிறது. படத்தின் உயிர்நாடியே, கவுதமின் தாய் அவருக்குப் பிடித்தவருடன் வாழ்க் கையை அமைத்துக்கொண்ட விதத்தை சிறுவன் கவுதமால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை என்பதுதான் அந்த உளவியல் பிரச்சினை. எந்தத் தவறும் செய்யாத தனக்குக் கிடைத்த தண்டனையாக அந்தப் பிரச்சினையை பார்ப்பதால்தான் அவன் முரட்டுத்தனமாகவும் விட்டேற்றியாகவும் மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருப்பதாக காட்சிகள் நகர்கின்றன.

முழுக்கவும் காதல் படமான இதன் திரைக்கதை சற்றுத் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கிறது. யாரையும் நம்பாமல் எவரிடம் இருந்தும் எட்டியே நிற்கும் கவுத முக்கு தாராவின் அன்பு கிடைக்கிறது. வெறும் மனரீதியான அன்பு மாத்திரமல்ல அது; காத லைக் கடந்து இருவரும் காமத்தை நுகர்கிறார் கள். அதன் உச்சபட்ச எல்லைகளைத் தாண்டிய பயணத்தில் இன்புறுகிறார்கள். இந்நிலையில் காதலர்களுக்கு இடையே பிரச்சினை எழுகிறது. ஆனால், தாரா அதைப் பக்குவப்பட்ட மனதுடன் திறம்படக் கையாள் கிறார். கவுதமுக்கு அந்த அளவுக்கு காதல் உணர்வைக் கையாளத் தெரியவில்லை. தான் தாரா மீது கொண்டது காதலா என் பதேகூட அவருக்குக் குழப்பமாக உள்ளது. இவையெல்லாம் படம் பார்ப்பவர்களையும் குழப்பத்துக்குள்ளாக்குகிறது.

புதுமையான இளமை ததும்பும் காட்சி களை வைத்து இவர்கள் இருவருக்கு மான காதலைச் சொல்லியிருப்பது படத் தின் காதல் சார்ந்த பகுதிகளை சுவாரஸ்ய மாக்குகிறது.

இரண்டாம் பாதியில் நாயகன் – நாயகிக் கும் இடையிலான மோதல் வலுத்த பிறகு, படம் பெரிதும் தொய்வடையத் தொடங்கு கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் ஒரே மாதிரி யான காட்சிகள் திரும்பத் திரும்ப வந்து திகட்ட வைக்கின்றன. நாயகன் கஞ்சா பழக் கத்துக்கு அடிமையாவது போன்ற காட்சிகள் அதற்கு தரப்படும் விளக்கங்கள் தேவையற் றவை. அவருக்கு அந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்துபவராக வரும் கதாபாத் திரம் பெண்களைப் பற்றிப் பேசும் வசனங்கள் மிகவும் பிற்போக்கானவை. நாயகன், நாயகியிடம் எவ்வளவு வன்முறையாக நடந்துகொண்டாலும், நாயகி மீண்டும் மீண்டும் நாயகனைத் தேடி வருவதில் அந்தப் பெண்ணின் கதாபாத்திரம் மீதான மரியாதையும் குறைகிறது.

ஹரிஷ் கல்யாண் முரட்டுத்தனமான இளைஞராகக் கவர்கிறார். இரண்டாம் பாதி யில் தன் மனச்சிக்கலை வெளிப்படுத்துவதில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சு நாத் காதலின் தீவிரம், பிரிவின் ஏக்கம். மற்ற வர்களைப் புரிந்துகொள்வதில் வெளிப்படும் முதிர்ச்சி, நிராகரிப்பின் வருத்தம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி தமிழ் சினிமாவுக்குத் தன் நல்வருகையைப் பதிவுசெய்திருக்கிறார். நாயகனின் தந்தையாக வரும் பொன்வண்ண னின் நடிப்பு முதிர்ச்சி ரகம். கவுதமின் நண்பர்களாக வரும் மா.கா.பா ஆனந்த், பால சரவணன் ஆகியோரது காட்சிகள் படத்தில் தீவிரத் தன்மையைச் சற்று மட்டுப்படுத்த திரைக்கதையில் பயன்பட்டுள்ளன.

சாம்.சி.எஸ்-ன் பாடல்களும் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு துணைபுரி கின்றன. வித்தியாசமான நிறங்கள், கோணங் களைக் கொண்டு தன் ஒளிப்பதிவை ரசிக்க வைத்திருக்கிறார் ஏ.கவின்ராஜ்.

ஒழுக்கசீலர்களுக்கு அதிர்ச்சிதரக்கூடிய சாத்தியம் கொண்ட இந்தத் திரைப்படத்தில், இறுதிவரை எந்த ஒழுக்கப் பாடமும் எடுக் காமல் தீர்வையும் சொல்லாமல் காதல் வாழ்வை அதன் போக்கில் அப்படியே காட்டியுள்ளார் இயக்குநர். அந்த வகையில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உருப்படியான காதல் ஆட்ட முயற்சி.