இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும் ஏற்கெனவே வெளியாகி விட்டது. புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைவும் ஏற்கெனவே பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
இப்போது, இந்த வரைவையும் அறிக்கையையும் வைத்து, தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை ஒரு தரப்பு வரவேற்றால், இன்னொரு தரப்பு எதிர்க்கிறது. அதுபோலவே, ஜெனீவாவில் முன்வைக்கப்படுவதற்காக பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை, ஒரு தரப்பு சாதகமாகப் பார்க்க, இன்னொரு தரப்பு, பாதகமானதாகக் காட்டுகிறது.
தமிழர் தரப்புக்குள்ளேயே, இந்த விடயங்களில் ஒற்றுமையில்லாத நிலை தோன்றியிருக்கிறது.
ஜெனீவாக் கூட்டத்தொடரில், இம்முறை இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம், ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம், இரண்டு நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளது என்பது தான்.
எந்த நிலைப்பாட்டை அதிகாரபூர்வமானதாக எடுத்துக் கொள்வது என்ற குழப்பம், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படும். அவ்வாறான நிலையில், இலங்கைக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில், அழுத்தங்களைக் கொடுக்காத தீர்மானமே முன்வைக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
அதுபோலவே, ஜெனீவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆகிய விடயங்களில் தமிழர் தரப்பு, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் இருப்பதை, சர்வதேச சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, தமிழர்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்காது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கத் தவறினால், உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் உறுப்பு நாடுகள் விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பரிசீலிக்க வேண்டும், இலங்கையில் ஐ.நாவின் கண்காணிப்புச் செயலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பன போன்ற பல யோசனைகளை அவர் முன்வைத்திருக்கிறார்.
இந்தப் பரிந்துரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் வரவேற்றிருக்கிறது. இன்னும் பல தமிழ்க் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதை வரவேற்கவில்லை.
“பொறுப்புக்கூறல் விடயத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இலங்கை அரசாங்கம், அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. இந்தநிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரை செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரது அறிக்கை அவ்வாறான பரிந்துரைகளைச் செய்யாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது” என்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைப்பதால் மாத்திரம், இந்த விவகாரத்துக்குத் தீர்வு கிடைத்து விடப் போகிறதா? அங்கு அது வெட்டுத் தீர்மானங்களில் சிக்கி விடாதா என்பது பற்றிய எந்த யோசனையுமின்றியே, இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் மாத்திரமன்றி, புதிய தீர்மானம் தொடர்பான விடயத்திலும் தமிழர் தரப்பு பிளவுபட்டு நிற்கிறது.
முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், காலக்கெடு, காலஅவகாசம், காலஅட்டவணை போன்ற எந்தச் சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த மூன்று சொற்களையும் வைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
தீர்மான வரைவின் படி, 30/ 1, 34/ 1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா, அதன் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், (2020 மார்ச்) ஓர் அறிக்கையையும் 46ஆவது கூட்டத்தொடரில், (2021 மார்ச்) விரிவான ஓர் அறிக்கையையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனைத் தான் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் என்று கூறப்படுகிறது.
நேரடியாக இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படுவது பற்றியோ, குறிப்பிட்ட எந்த காலக்கெடுவுக்குள் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியோ தீர்மான வரைவில் எதுவும் கூறப்படவில்லை.
இந்தநிலையில் தான், காலவரம்பு ஒன்றைக் குறிப்பிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் கோருகின்றன. கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் கட்சிகளுமே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
அதாவது, ஜெனீவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவதற்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும். அது இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதாக இருக்கும்.
ஆனால், அந்தளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில், சர்வதேச சமூகம் குறிப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேவேளை, இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று ஐந்து தமிழ்க் கட்சிகள், ஐ.நாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி மாத்திரம், இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது,
முன்னதாக, காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். பின்னர், சுமந்திரன் அந்த நிலைப்பாட்டை அடியோடு மாற்றியிருக்கிறார்.
அவரது பார்வையில், 2021 ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கான காலஅவகாசம் அல்ல; ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வேலையே அது என்று வாதிட்டிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி, 2021 மார்ச் வரை இலங்கை மீதான ஐ.நாவின் கண்காணிப்பு நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வாதத்தை முன்வைத்திருக்கிறார்.
ஐ.நாவின் கண்காணிப்பில் இலங்கை இருக்கப் போகிறது என்பதைத் தான் இந்த விடயத்தில் சாதகமான ஒன்றாகச் சுட்டிக்காட்ட முனைகிறார் சுமந்திரன்.
ஐ.நாவின் கண்காணிப்பில் இருந்தால் மாத்திரம் போதுமா, இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விடுமா? என்பது தான் தமிழர்களின் கேள்வி.
ஏனென்றால், 2015ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரசாங்கத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் கண்காணிப்பில் தான் இருந்தது, அந்தக் காலத்தில் கூட, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அப்படிப்பட்ட நிலையில், காலவரம்பு எதையும் நிர்ணயிக்காமல், வெறுமனே கண்காணிப்பு என்ற பெயரில் காலஅவகாசத்தைக் கொடுப்பதால் என்ன பயன் என்பது தான், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஐ.நாவும் சரி, சர்வதேச சமூகமும் சரி சில தெளிவான நிலைப்பாடுகளின் இருக்கின்றன. இலங்கைக்கு அதிக அழுத்தங்களைக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், தமிழர் தரப்புத் தான், தமது எதிர்பார்ப்பு என்ன, நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பமடைந்து போயிருக்கிறது.
சாதாரண தமிழ் மக்களிடம், ஜெனீவா நகர்வுகள் குறித்து ஏமாற்றங்கள் உள்ளன. ஐ.நா தொடர்பாக, சர்வதேச சமூகம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தொடர்பாக அவர்களுக்கு நிறையவே அதிருப்திகளும் இருக்கின்றன.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீதோ, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளின் மீதோ நம்பிக்கையற்ற நிலை தான் உள்ளது.
இத்தகைய நிலையில், ஜெனீவா விவகாரத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், இரண்டு பிரிவுகளாக முட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அடுத்த வாரம், நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம், தமிழர் தரப்பின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டதாக இருக்குமா என்ற வலுவான கேள்விகள் உள்ள நிலையில் தான், இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்று தெரியாமல் முட்டிக் கொள்ளுகின்றன தமிழ்க் கட்சிகள்.
-
கே. சஞ்சயன்