‘எழுக தமிழ்’ வடக்கில் நீதி கோரிப் போராட்டம்!

எதிர்வரும் 24ஆம் திகதி வடக்கு மக்களை ஒன்றிணைத்து நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்றுகூடலிற்கு ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கண்டனப் பேரணி மற்றும் பொங்கு தமிழ் ஒன்றுகூடலினை இணைக்கும் பெயராக ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களை ஒரு கோசத்தின் கீழ் – ஒரு கொள்கையின்கீழ் ஒன்றிணைத்தலுக்குப் பெயரே பொங்குதமிழ். தமிழர்களைப் பீடித்துள்ள மொத்த அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் பொதுக்களத்தைக் குறிக்கும் குறியீடு.

எம்மை நாமே ஆள்வதற்கும், எமக்கெதிரான அனைத்துத் தளைகளிலிருந்தும் எம்மை விடுவித்துக்கொள்ளுதலைப் பிரகடனம் செய்யும் மந்திர உச்சாடனமே பொங்குதமிழ்.

எனவே பொங்குதமிழ் என்பது ஆன்மத்துச் சொல். நூற்றாண்டுகால அடிமைத்தனத்தை உடைத்தெறியும் தமிழ் சமூகத்தின் கூட்டுணர்வுச் சொல்லென அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கண்டனப் பேரணி மற்றும் ஒன்றுகூடலை ‘எழுக தமிழ்’ எனப் பெயரிட ஏற்பாட்டுக்குழு ஒழுங்கு செய்துள்ளது.

இக் கண்டனப் பேரணி மற்றும் ஒன்று கூடலில் அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.