இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற எமது கோரிக்கையை கைவிடுமாறு மேற்குல நாடுகள் அழுத்தமளிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் இருந்தவாறே வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் தாங்கள் பங்கேற்றுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் நிலைப்பாடுகள் எவ்வாறாகவுள்ளன?
பதில்:- இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றும் செயற்பாடு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அன்றுமுதல் 2015ஆம் ஆண்டுவரையில் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அப்போதிருந்த அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடிகளை வழங்கும் வகையில் அமைந்திருந்தன.
பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்புக்கள் இவ்வாறு கடுமையான தீர்மானங்கள் நிறைவேறுவதற்கு உறுப்புநாடுகளிடமிருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு காரணமாக இருந்தன.ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலத்தில் நிலைமைகள் மாறியுள்ளன. முன்னர் கடுமையான தீர்மானங்களை நிறைவேற்ற அதே மேற்குல நாடுகளின் விருப்பத்திற்கு செயற்பட்டு வருகின்ற ஆட்சியாளர்கள் ஆட்சிப்பீடத்தில் இருப்பதன் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய ஆட்சியாளர்களின் காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதும் கிடைக்கவில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் எடுத்துரைப்பதை தற்போதை ஆட்சியாளர்களை பாதுகாக்க விளையும் மேற்குல நாடுகள் விரும்பவில்லை.அவர்கள் இலங்கை அரசாங்கத்தினை நெருக்கடிகளின்றி பாதுகாப்பதற்கே விரும்புகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக தமது கருத்துக்களை முன்வைப்பதற்கும்ரூபவ் அவர்களின் உண்மையான நிலைமைகளை எடுத்துக்கூறுவதற்கு விளையும் அரசியல் கட்சிகள்ரூபவ் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஜெனீவாவில் பெரும் சாவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களை பாதுகாக்கின்ற மேற்குலத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அதிகளவான கருத்துக்களை அமர்வுகளில் பதிவு செய்வதன் ஊடாகவே உறுப்பு நாடுகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்து தீர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவருவற்கான கடினமான முயற்சிகளை எடுத்துவருகின்றோம்.
கேள்வி:- சர்வதேசம் ஊடாகவே தமக்கு நீதி கிடைக்கும் என பாதிக்கப்பட்ட மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்ற நிலையில் சர்வதேசதத்தின் நிகழ்ச்சி நிரல் மாற்றமடைந்துள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள், அப்படியென்றால் நீதியைப் பெறுவதற்கான அடுத்தகட்டம் என்ன?
பதில்:- ஐ.நா.மனித உரிமை பேரவையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் பாதிக்கப்பட்ட மக்களின் முழுமையான அனுசரணையின்றி எதனையும் செய்யக்கூடாது என்ற பொதுவான நிலைப்பாடு காணப்படுகின்றது. தற்போதைய சூழலில் மேற்குல நாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பயன்படுத்தி தமது நலன்களை நிறைவேற்றுகின்றார்களே தவிர தீர்வுகளை வழங்குவது அவர்களின் உண்மையான நோக்கம் அல்ல.
தங்களின் விடயங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதாயின் பாதிக்கப்பட்ட மக்களின் அனுசரணை உள்ளது என்பதை காண்பிக்க வேண்டிய தேவை அந்நாடுகளுக்கு உள்ளது. அதற்காகத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அந்நாடுகள் பயன்படுத்துகின்றன.இதில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.சர்வதேச நாடுகள் கூறுகின்ற அனைத்து விடயங்களையும் நிபந்தனைகளின்றி ஏற்றுக்கொள்வதை விடவும் எமது அபிலாஷைகள் கோரிக்கைகளில் பற்றுறுதியாக நின்று நிபந்தனைகளை முன்வைக்கின்றபோது சர்வதேச நாடுகள் நிச்சயமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும். தமது நலன்களை முன்னெடுப்பதற்கு அவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே நகரவேண்டும்.ஆனால் கூட்டமைப்பு மக்களின் ஆணைபெற்றவர்கள் என்ற தோரணையில் நிபந்தனையின்றி மேற்குலத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படுகின்றமை தான் நிலைமைகள மோசமடையச் செய்துள்ளது. ஆகவே தான் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு எதிராக இருக்கின்றார்கள் என்பதை வலுவாக பதிவு செய்வதற்காகவே நாமும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏனையவர்கள் என அனைவரும் பேரவை அமர்வுகளில் பங்கெடுத்து கருத்துக்களை பதிவு செய்கின்றோம்.
கேள்வி:- கால அவகாசம் வழங்கப்படுவதால் சர்வதேசத்தின் மேற்பார்வை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகின்ற நிலையில் நீங்கள் அதனை வலுவாக எதிர்ப்பதற்கான காரணம் என்ன?
பதில்:- பொறுப்புக் கூறலுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவதன் மூலம் சர்வதேச மேற்பார்வை நீடீக்கின்றது. இல்லாது விட்டால் இந்த விடயம் ஐ.நா.அரங்கிலிருந்து அகன்று விடும் என்று கூறுவதானது தமிழ் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக கூறப்படுகின்ற கருத்தாகும்.உள்நாட்டில் சீனா சார்ப்பு ஆட்சியாளர்களான மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முஸ்தீபுகளைச் செய்துவருகின்ற நிலையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச அரங்கில் அல்லது நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டிய தேவை பாதிக்கப்பட்ட மக்களை விடவும் மேற்குலக நாடுகளுக்கே அதிகமாக காணப்படுகின்றது.
இந்த புரிதலினை எம்மிடையே முதலில் தெளிவாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் அந்த விடயத்தினை எந்தளவு தூரம் எமக்குச் சார்பானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.ஆனால் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்த பாதிக்கப்பட்ட மக்களை மறந்து அவர்களை ஏமாற்றும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விடயம் நீங்கினால் அனைத்தையுமே இழப்போம் என்று பொய்யுரைக்கின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை கூறாது மேற்குல நாடுகளை பாதுகாக்கின்ற விடயத்திலேயே அதீத கரிசனையைக் கொண்டிருக்கின்றார்கள்.மேலும் இலங்கை விடயத்தினை மனித உரிமைகள் பேரவைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருக்கவே சர்வதேச நாடுகள் நாடுகள் விரும்புகின்றன. இதனால் எவ்விதமான நன்மைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
இலங்கை அரசாங்கமும்ரூபவ் இவ்வாறு மட்டுப்படுத்தி வைப்பதால் தனக்கு ஆபத்தில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டு சர்வதேச அரங்கில் நாட்டின் விடயம் இருப்பதை பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் வாக்குவங்கியை அதிகரிக்கும் பிரசாரத்தினை முன்னெடுக்கின்றது.இதனால் இலங்கை விடயத்தினை மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் வைத்திருக்காதுரூபவ் பொதுச்சபை அல்லது பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றததிற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்
கேள்வி:- உங்களின் கருத்துப்படி, தற்போதைய ஆட்சியாளர்கள் பக்கம் மேற்குலம் இருக்கின்றது. ஆட்சியைப் பிடிப்பதற்கு முஸ்தீபுச்செய்யும் ராஜபக்ஷவின் சார்பில் சீனா இருக்கின்றது. இந்த சூழலிலும் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்டிருக்கும் இத்தரப்புக்ளை தாண்டியும் இலங்கை விடத்தினை எவ்வாறு குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்வது விசேட தீர்ப்பாயத்திற்கு எடுத்துச் செல்லவது எவ்வாறு நடைமுறைச்சாத்தியமாகும்?
பதில்:- இலங்கை அரசாங்கம் இனப்படுகொலைகள் தொடர்பில் விசாரணைச் செய்யப்போவதும் இல்லை. அதற்கு திறந்த மனதுடன் அனுமதிக்கப்போவதுமில்லை. எந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் யதார்த்தமாகவுள்ளது. இவ்வாறான நிலையில் மனித உரிமைகள் பேரவையிக்குட்பட்டதாக இலங்கை விடயத்தினை மட்டுப்படுத்தினால் பொறுப்புகூறல் செய்யப்படப்போவதுமில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்போவதுமில்லை என்பது உறுதியான விடயம். அவ்வாறான நிலையில் எமக்கு வேறு எந்த தெரிவும் இல்லை. இந்த தெளிவு இருக்குமாயின் முதலில் பாதுகாப்புச்சபை ஊடாக அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான முயற்சிகளை முதலில் எடுக்க வேண்டும். நடைமுறைச்சாத்தியமா இல்லையா என்பது இரண்டாவது விடமாகின்றது.அடுத்ததாக, ராஜபக்ஷ தரப்புடன் நெருக்கமாக இருக்கும் சீனா பாதுகாப்பு சபைக்கு இலங்கை விடயம் வந்தால் தனது வீட்டோ அதிகரதத்தினை பயன்படுத்தும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.
பாதுகாப்பு சபையில் உள்ள ஐந்து உறுப்பு நாடுகளின் வீட்டோ அதிகாரத்தினை பயன்படுத்திய வரலாற்றினை கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது. பனிப்போரின் பின்னர் வீட்டோ அதிகாரத்தினை அதிகளவு பயன்படுத்திய நாடாக அமெரிக்கா இருக்கின்றது. இரண்டாவதாக சோவியத் யூனியன் உள்ளது. சோவியத் யூனியன் உடைக்கப்பட்டு ரஷ்யா தலைமை ஏற்ற பின்னர் அந்நாடு தனக்கான வீட்டோவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் பயன்படுத்தியுள்ளது.
80களுக்கு பின்னர் பிரித்தானியாவும் பிரான்ஸும் தாம் வீட்டோவை பயன்படுத்துவதில்லையென கொள்கை அளவில் தீர்மானிக்கின்றார்கள். அடுத்து சீனாவைப்பார்த்தால் வீட்டோ அதிகாரத்தினை மிகக்குறைந்த அளவில் 11தடவைகளே பயன்படுத்தியுள்ளன. மேலும் தன்னுடைய நலன்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்ற போதுதான் வீட்டோவை பயன்படுத்துகின்ற முடிவுக்கு சீனா செல்கின்றது. ஏனைய சந்தர்ப்பங்களில் ஒதுங்கியே இருந்துள்ளது. இவ்வாறிருக்கையில் இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் இந்தியாவும் மேற்குல நாடுகளும் விரும்பும் அரசாங்கமே தவிரரூபவ் சீனா விரும்பும் அரசாங்கம் அல்ல. ஆகவே பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரத்தினை நகர்த்துகின்றபோது சீனா எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த உண்மைகளை பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் அவர்களின் பிரதிநிதிகள் தெளிவு படுத்துவது கிடையாது.
வல்லரசுகளின் எடுபிடிகளாக அவர்கள் செயற்படுவதன் காரணத்தால் அவர்களால் இந்த உண்மைகளை கூற முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் பொறுப்புக்கூறலை முடக்கச்செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள். இந்த நிலையிலிருந்து விடுபட வேண்டுமென்றால் முதலில் மக்கள் தெளிவடைந்து தமது ஆணையை வழங்க வேண்டும்.
கேள்வி:- கூட்டமைப்பின் செயற்பாடுகள் தடம்மாறியுள்ளன என்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பு உங்களுக்கும் உள்ளதல்லவா?
பதில்:- ஆம், அதற்காகத் நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- அப்படியென்றால் பூகோள அரசியல் களத்தில் நீங்கள் எவ்வாறான முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்? யாருடன் கலந்துரையாடல்களை செய்துள்ளீர்கள்?
பதில்:- இம்முறை கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தாகயகத்தில் மேற்குலக நாடுகளின் தூதரக இராஜதந்திரிகள் எம்முடன் கலந்துரையாடியுள்ளார்கள். அவர்களிடத்தில் எமது நிலைப்பாடுகளை தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்துள்ளோம். அச்சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயத்திற்கோ கொண்டுசெல்லும் வலிந்த கோரிக்கையை கைவிடச்செய்ய வேண்டும் மையப்படுத்தியே எம்முடன் பேச்சுவார்த்தைகளை செய்கின்றார்கள். நாங்கள் அதனை முற்று முழுதாக மறுதலித்திருந்தோம். இருப்பினும் அந்த மேற்குல நாடுகள் எமது கருத்துக்களை தாண்டியும் கூட்டமைப்பின் துணையுடன் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றார்கள். தொடர்ந்தும் அவ்வாறே செய்வதற்கு முற்படுவார்கள்.
கேள்வி:- ஜெனீவாவில் இலங்கை மீதான பிரேரணையை தலைமை தாங்கி கொண்டுவரவுள்ள பிரித்தானியா உள்ளிட்ட பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கின்ற தருணங்களில் உங்கள் நிலைப்பாட்டினை முன்வைத்தீர்களா? அவர்களின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கின்றது?
பதில்:- நான், அவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது நிலைப்பாட்டினை உறுதிபட குறிப்பிட்டே வந்திருக்கின்றேன். ஆனால் பாதுகாப்புச் சபையில் சீனாரூபவ் வீட்டோவைப் பயன்படுத்தும் ஆகவே அந்த முயற்சி சாத்தியமில்லை என்பதே அவர்களின் வாதமாக இருக்கின்றது. அதற்கான பதிலை வழங்குகின்றபோது, மியன்மாருக்கான விசேட ஐ.நா பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டினை பாதுகாப்புச் சபை ஊடாக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
பாதுகாப்பு சபை ஊடாக அந்த செயற்பாடு முடியாது விட்டால் ஒரு நாடு அல்லது நாடுகளின் கூட்டு மியன்மாரை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லவதற்கு வழிகள் இருப்பதாகவும் அந்தப்பிரதிநிதி கூறியுள்ளார். இதேபோன்று சிரியா ரோம் உடன் படிக்கையில் கைச்சாத்திடாமையின் காரணமாக அதனை குற்றவியல் நீதிமன்றத்தினால் நேரடியாக விசாரணைக்கு உட்படுத்த முடியாது. ஆகவே பாதுகாப்புச் சபை ஊடாக சிரியாவை கொண்டு செல்ல முற்பட்டால் ரஷ்யா வீட்டோவை பயன்படுத்தும். இதனால், சிரியாவால் பதிக்கப்பட்ட தரப்புக்கள் தங்கியுள்ள நாடு ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அந்நாடு சிரியா தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகின்றது.ஆகவே அரசியல் சுயநலன்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வது தான் உண்மையான இலக்கு என்றால் எமது விடயங்களை நான் குறிப்பிட்டதைப்போன்று மாற்றுவழிகள் தொடர்பில் ஆராய வேண்டும்.
கேள்வி:- மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகப்பிரதிநிதிகளையும் நாம் சந்தித்திருந்தோம். அவர்களிடத்திலும் இந்த விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளோம். ஆணையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடங்கள் பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களின் மீது எந்த வகையிலும் தாக்கத்தினை செலுத்தப்போவதில்லை. பேரவையின் உறுப்பு நாடுகள் தான் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆணையாளரின் அறிக்கையில் உள்ள விடயங்களைகூட அவர்கள் உள்வாங்காது விடுவதற்கு உரித்துக்கள் இருக்கின்றன.அதேபோன்று பிரேரணையை கொண்டுவருகின்ற நாடுகளைத்தவிர பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளிடத்தில் பேச்சுக்களை நடத்தினாலும் வல்லாதிக்க நாடுகளின் செல்வாக்கினால் அவற்றின் கருத்துக்களை உள்வாங்குவதில் பிரச்சினைகள் இருக்கின்றன. விசேடமாக ஆபிரிக்க, ஆசிய நாடுகளைச் சந்தித்து நாம் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களை எமக்குச் சார்பாக பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தபோது, அதனை அறிந்த கூட்டமைப்பு அச்செயற்பாட்டினை முறியடித்து தடைகளை போட்டிருந்தன.
குறிப்பாக, 2014 இல் ஆபிரிக்க கண்ட நாடுகளுடன் சந்திப்பதற்கு ஏற்பாடுகளாகியிருந்த நிலையில் நிமல்கா பெர்ணான்டோ ஊடாக இந்த விடயத்தினை அறிந்த கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மற்றும் சட்டத்தரணி நிரான் ஆகியோரை பயன்படுத்தி அந்த சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி எமது கருத்துக்களை தெரிவிக்க விடாது தடுத்திருந்தனர். இவ்வாறு தான் ஆணைபெற்றவர்கள் என்பதை மையப்படுத்தி எமது முயற்சிகளை ஒவ்வொரு விடயத்திலும் கூட்டமைப்பினர் தடுத்துவருகின்றனர்
(நேர்காணல்:- ஆர்.ராம்)