சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர்.
மார்ச் 23ஆம் நாள் தொடக்கம், 29ஆம் நாள் வரை இந்தக் கூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய பிரதி தூதுவர் ஜோன் பிலிப் இந்த தகவலை வெளியிட்டார்.
“இந்தோ-பசுபிக் முயற்சி-2019 என்ற பெயரிலான இந்தக் கூட்டுப் பயிற்சியில் அவுஸ்ரேலியாவின் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் பங்கேற்கின்றனர்.
அவுஸ்ரேலிய கடற்படையின், கூட்டு செயலணியைச் சேர்ந்த, கன்பெரா, நியூகாசில், பராமட்டா, சக்சஸ் ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சிக்காக சிறிலங்கா வரவுள்ளன.
இந்தக் கப்பல்கள், கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், அவுஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் மத்தல விமான நிலையத்துக்கு வரவுள்ளன.
இரண்டு நாடுகளின் நலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கும், ஒன்றின் பாதுகாப்பு படைகளுடன் மற்ற நாட்டின் படைகள் இணைந்து செயற்படுவதற்கும் நல்லதொரு வாய்ப்பாக இது அமையும்.
பிராந்திய பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாகவும் இது இருக்கும். இந்தக் கூட்டுப் பயிற்சிக்காக, அவுஸ்ரேலிய கடற்படையின் ஈரூடக உலங்குவானூர்தி தாங்கி கப்பலும் கட்டளைக் கப்பலுமான HMAS Canberra வும், HMAS Newcastle என்ற அவுஸ்ரேலிய கடற்படையின் ஏவுகணைப் போர்க்கப்பலும் வரும் 23ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.
நீர்மூழ்கி எதிர்ப்பு போர்கப்பலான, HMAS Parramatta மற்றும் விநியோக கப்பலான HMAS Success என்பன, 23ஆம் நாள் தொடக்கம் 27ஆம் நாள் வரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும்.” என்று தெரிவித்தார்.
இதன்போது, HMAS Canberra என்ற உலங்குவானூர்தி தாங்கி கப்பலில் சிறிலங்கா இராணுவத்தினர் விமான மூலம் தரையிறக்கப்படும் பயிற்சி அளிக்கப்படும் என்று அவுஸ்ரேலிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சீன் உன்வின் தெரிவித்தார்.
கொழும்பை அண்டிய பகுதிகளில் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறவுள்ளது. அத்துடன், HMAS Canberra கப்பலில் சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையினருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.
திருகோணமலையில் இரு நாடுகளினதும் கடற்படைக்கு இடையிலான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தப்படும்.
குறிப்பாக, வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகளில், சுழியோடும் குழுக்கள் ஈடுபடுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.