திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல, எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
திருமணம் ஆன நடிகைகளை இயக்குனர்கள் புதிய படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடங்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகின்றனர். அந்த வழக்கத்தை சமீபத்தில் உடைத்திருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதுடன், லிப் டு லிப் முத்தக்காட்சி, கவர்ச்சி காட்சிகளில் நடித்து புது டிரெண்ட் உருவாக்கினார். இது ஒர்க் அவுட் ஆனதால் பாலிவுட்டில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்றவர்களும் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சீனியர் நடிகைகள் நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டி வருகின்றனர். தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். வயது ஏறினாலும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகைகளுக்கு தைரியம் தரும் வகையில் தீபிகா படுகோனே பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ‘அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. என்னுடைய தகுதிக்கு ஏற்பவே சம்பளம் தரப்படுகிறது. அப்படியில்லாமல் யாரும் பெரிய தொகையை தர மாட்டார்கள். திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்துவிடுகிறது என்று எண்ணி அவர்களை ஒதுக்குவது சரியல்ல. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும்.
திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்துவிடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன். திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன என்பதை சமீபத்திய படங்கள் நிரூபித்திருக்கின்றன’. இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.