இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்தது. தற்போது இந்தி பட உலகுக்கும் போய் உள்ளார். பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை கதை படமாகிறது.
இதில் அஜய் தேவ்கன் ரகீமாக நடிக்கிறார். அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். அமித் சர்மா இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “இந்தி படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. நான் சவாலான வேடங்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். இந்தி படமும் அப்படித்தான் இருக்கும். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதியை இந்த படம் பேசும்” என்றார். போனிகபூர் சிபாரிசின் பேரிலேயே கீர்த்தி சுரேசுக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்தியில் கீர்த்தி சுரேஷ் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.
Eelamurasu Australia Online News Portal