நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர்.
தாக்குதல் நடத்தியதை அந்த நபர்கள் பேஸ்புக் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை சிலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து நகரின் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.