புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி.
இலங்கை அம்பாறை மாவட்டம் – விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன், ஜெகன் வசிக்கிறார். அவருக்கு இப்போது 32 வயதாகிறது. கூலி வேலைக்காக, 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஒற்றைக் காலால், சைக்கிள் மிதித்து பயணிக்கிறார். “ஆனால், ஒவ்வொரு நாளும் தொழில் கிடைப்பதில்லை. கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கும் மேல் குழந்தைக்கான பால்மாவு உள்ளிட்ட செலவுகளுக்கே போய்விடுகிறது” என்கிறார் ஜெகன்.
“2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தபோது முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதியில் ஆயுதமேந்தி சண்டையிட்டேன். அப்போது எனது இடது காலில் காயமேற்பட்டது. விஸ்வமடு பகுதியில் தற்காலிகமாக இயங்கிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன். அப்போது என் காலைத் துண்டிக்க வேண்டியேற்பட்டது” என சொல்லி விட்டுசிறிது நேரம் மௌனம் காத்தார் ஜெகன்.
“இறுதி யுத்தத்தின் ஒரு கட்டத்தில் படையினரிடம் சரணடையுமாறு இயக்கத்தின் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. பெருந்தொகையானோர் படையினரிடம் சரணடைந்தனர்; நானும் சரணடைந்தேன். பின்னர், வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டேன். 2010ஆம் ஆண்டு விடுதலையானேன்”.
புனர்வாழ்வு முகாமுக்குச் சென்று 2 மாதத்துக்குப் பின்னர்தான் ‘விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்’ எனும் செய்தி தனக்குத் தெரிய வந்ததாக கூறுகிறார் ஜெகன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது, சூசை மற்றும் தமிழ்ச் செல்வன் போன்ற தளபதிகளை தான் சந்தித்துள்ள போதும், பிரபாகரனை நேரில் கண்டதில்லை என்கிறார் இவர்.
2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு, இரண்டு வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது.
“கச்சான் (நிலக்கடலை) தோட்டத்தில் கூலி வேலை செய்கிறேன், ஆடுகளை கூலிக்காக மேய்த்துக் கொடுக்கிறேன். இதற்காக 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சைக்கிள் மிதித்துப் பயணிக்கிறேன். வருமானம் போதாது. கிடைக்கும் கூலியில் குழந்தைக்கான பால் மாவு உள்ளிட்ட பொருள்களுக்கே அதிகம் செலவாகி விடுகிறது” என்றார்.
தனக்கு இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் உதவவில்லை என்கிறார் ஜெகன்.
இவர் குடியிருக்கும் வீடு கூட, அரசு வழங்கிய நிதி உதவியில் கட்டப்பட்டதாகும். 8 லட்சம் ரூபாயினை இதற்காக அரசு வழங்கியுள்ளது.
“ஓடும் சைக்கிளும் மிகவும் பழையதாகிவிட்டது. புதிதாக வாங்கவும் பணமில்லை. புதிதாக ஊன்றுகோல் ஒன்றும் வாங்க வேண்டும். அதற்கும் வசதியில்லை” என்கிறார், அந்த முன்னாள் போராளி.
விநாயகபுரத்தில் தன்னைப் போலவே, வாழ்வாதாரத்துக்காகப் போராடும் இன்னும் பல முன்னாள் போராளிகள் உள்ளனர் என்கிற தகவலையும் அவர் தெரியப்படுத்தினார்.
தனக்கு அரசு வேலை கிடைத்தால், நிம்மதியாக வாழ முடியும் என்று கூறும் ஜெகன், குறைந்தது, ஒரு மூன்று சக்கர வண்டி (ஆட்டோ) இருந்தாலும், அதனை ஓட்டி பிழைப்பு நடத்த முடியும் என்கிறார்.
இலங்கையில், அரச தொழில்கள் வழங்கும் போது, அவற்றில் 3 சத வீதத்தினை, அந்தந்த தொழில்களுக்கான தகைமைகளைக் கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்கிற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தின் விடுதலைக்காக தான் போராடிய போதும், தன்னுடைய சமூகத்திடமிருந்து, எந்தவித ஆதரவும் தனக்குக் கிடைக்கவில்லை என்கிற வருத்தமும் ஏமாற்றமும் தனக்கு இருப்பதாக ஜெகன் கூறுகிறார்.
நன்றி -BBC