மாதா அமிர்தானந்தமயி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம்!

இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆன மாதா அமிர்தானந்தமயி தேவி வரும் ஏப்ரல்- மே மாதங்களில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மாதா அமிர்தானந்தமயி தேவி  இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார்.  இவர் பக்தர்களால் “அம்மா” என்றும், மேலைநாட்டு பக்தர்களால் “அரவணைக்கும் அன்னை” என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற கிராமத்தில் மாதா அமிர்தானந்தமயிமடம் அறக்கட்டளை மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டுள்ளார். இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிளும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை செய்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை போதித்து, உலகம் முழுதும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வினை காண வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அமிர்தானந்தமயி அறக்கட்டளை அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மாதா அமிர்தானந்தமயி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன்(ஏப்ரல் 16-20), சிட்னி(ஏப்ரல் 22-23), பிரிஸ்பேன்(ஏப்ரல் 25), சன்ஷைன் கோஸ்ட்(ஏப்ரல் 26-28), ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு சிறப்பு சத்சங்கம், தரிசனம், பஜனைகள் போன்றவற்றில் கலந்துகொள்ள உள்ளார்.

இதையடுத்து சிங்கப்பூர் செல்லும் மாதா அமிர்தானந்தமயி அங்கு ஏப்ரல் 30 முதல் மே 2ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, மெரினா பே சண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.