இந்த நாடாளுமன்றத்தில், புதிய அரசமைப்பு ஒன்று உருவாகுமென்றும் அதில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பங்களிப்பு முழுமையாக இருக்குமென்றும் நம்பினோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இப்போது நிலைமை அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில்லை. அது தகர்ந்துவிட்டது என்றார்.
மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஜனாதிபதியோ, அரசாங்கமோ நிராகரித்தால், அரசியல் தீர்வை நிராகரித்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கிடைக்குமெனக் கேட்ட அவர், அரசியல் ரீதியாக நாங்கள் வேறுபட்டாலும் கூட நாம் அனைவரும் ஒன்றுபட்டு, இனப்பிரச்சினையை தீர்க்க ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர வேறு வழிமுறையில்லை என்றார்.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நிறைவேறியதன் பின்னர் நாம் எமது ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுப்போமெனத் தெரிவித்த அவர், அதற்கு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுப்போம் என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11) நடைபெற்ற, வரவு- செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு தருவதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமையவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எதிராக, ஜனாதிபதி இன்று செயற்பட்டு வருகின்றார். இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைத் தடுக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்றார்.
அரசமைப்பை மீறிச் செயற்பட்ட ஜனாதிபதியின் செயற்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி அவர் நடந்துகொண்ட விடயங்களையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளவில்லையெனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்ற தீர்மானத்துக்கு அமைய, முழுமையான ஆதரவைக் கொடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அரசாங்கத்தை ஆதரித்துவந்துள்ளோம் என்றார்.
“2015ஆம் ஆண்டு, தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவேன் என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதற்கமையவே, ஐக்கிய நாடுகள் சபையிலும் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது அவற்றை மீறும் வகையிலேயே, ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். இதனால், தமிழ் மக்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்” என்றார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த நம்பிக்கை தகர்ந்திருந்தாலும், அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே தடையாக உள்ளதெனத் தெரிவித்த அவர், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நாம் எமது நம்பிக்கையைக் கைவிடாது அரசியல் தீர்வொன்றை எட்டவேண்டுமென்ற நிலையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
இந்த நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையை தாம் பூரணமாக ஆதரிக்கின்றோம் என்றுத் தெரிவித்த அவர், எனினும், ஜனாதிபதியோ, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றார்.
இனப்பிரச்சினைகான தீர்வுகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என்றார்.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். எமக்குள்ள ஒரே பலம் சர்வதேச தீர்மானம் மட்டுமேயாகும். ஆகவே, அதனை நாம் நிராகரிக்க முடியாதெனத் தெரிவித்த அவர், யுத்தக்குற்ற உண்மைகள் அறியப்பட வேண்டும். மன்னார் புதைகுழி விடயத்தில் சர்வதேச அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மனித புதைகுழி விடயத்தில் எலும்புகள் போர்த்துக்கேயர் காலத்துக்கு உரியவை எனக் கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.