இந்தியாவில் நடக்கவுள்ள 17வது நாடாளுமன்ற தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 11-ந்திகதி தொடங்கி மே 19-ந்திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியாவில் 17வது நாடாளுமன்ற தேர்தலான இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது.
தேர்தலுக்காக நாடு முழுக்க அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதிலும் வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரமாக உள்ளனர். தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என இந்தியா முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும்.
இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் 90 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற 2014-ம் ஆண்டு தேர்தலில் 85 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்தனர். தற்போது 5 கோடியே 50 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். இந்தியாவில் முதல்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டபோது, 17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தனர். இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் மக்கள் 20 வயதுக்குள்ளும் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் 35 வயதுக்கும் கீழ் உள்ளனர்.
38,325 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 3,626 கட்சிகள் உள்ளன. இவற்றில் 1841 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தில் முறையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.