ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்திருக்கும் வில்லாவுட் தடுப்பு முகாமில் 27 வயது ஆப்கான் அகதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே முகாமில் மூன்று தினங்களுக்கு முன்னர் ஈராக் அகதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்ற ஆப்கான் அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2012 முதல் தடுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அந்த அகதியின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஆஸ்திரேலிய அரசு வேண்டுமென்றே குடிவரவு தடுப்பு முறையை சட்டவிரோத தண்டனைகளை கொடுப்பதற்காக பயன்படுத்துகின்றது. நாம் பார்க்கும் தற்கொலையும் தற்கொலை முயற்சிகளும் இந்த கொள்கைகளின் தவிர்க்கப்பட முடியாத விளைவுகள்,” ஐன் ரிண்டோல் விமர்சித்திருக்கிறார்.
“இங்கு தற்கொலை சாதாரணமாகிவிட்டது. ஆனால் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி அவர்கள்(ஆஸ்திரேலிய அரசு) கண்டுகொள்வதில்லை,” என இத்தடுப்பு முகாமில் உள்ள அகதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, ஈராக் அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை உறுதிப்படுத்தும் விதமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள ஓர் ஆண் கைதி மரணமடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்திருந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையிலேயே, ஆப்கானிஸ்தானின் அகதியின் தற்கொலை முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.