ட்விட்களின் மீது புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் ட்விட்களை புகார் அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் ட்விட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாக புரிந்து கொள்ள முடியும்.
புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் ட்விட்கள் பற்றி அதிகளவு விவரங்களை தெரிவிக்க முடியும்.
இத்துடன் ரிப்போர்ட் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும். முன்னதாக பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ட்விட்டர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இவற்றில் பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் ஆகும். டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தாகும். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தீங்கு ஏற்படுத்த காரணமாக அமையும்.
ட்விட்டரில் கருத்து சுதந்திரம் மற்றும் கேலி கிண்டல்களை வித்தியாசப்படுத்துவதில் ட்விட்டர் சிரமப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் அவற்றை எதிர்கொள்ள ட்விட்டர் முயன்று வருகிறது.