ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட வவுனியா பிரதேசசபை தலைவர்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவருக்கும் ஊடகவியலாளருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஓமந்தையில் மதுபானசாலையை மூடுமாறு கோரி நேற்று மாலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மதுபானசாலை உரிமையாளருடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பிரதேசசபையின் தலைவர் மதுபானசாலையை நோக்கி சென்று மதுபானசாலைக்குள் தனித்து இரகசியமாக உரிமையாளரை சந்திக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களையும் செல்லுமாறு கோரியிருந்தனர்.

ஊடகவியலாளர்களும் செய்தியை சேகரிக்க சென்றிருந்த போது பிரதேசசபையின் தலைவர் மதுபானசாலைக்குள் சென்றபோது ஊடகவியலாளர்கள் படம் எடுப்பதை பிரதேசசபை தலைவர் அவதானித்துள்ளார்.

அப்போது தான் கதைப்பதற்காகவே செல்வதாகவும், இதனையும் நீங்கள் வீடியோ எடுக்கின்றீர்கள் என ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டதாக தெரிகிறது.

இதன்போது ஊடகவியலாளர்கள் நீங்கள் வெளிப்படையாகத்தான் கதைக்கப்போகின்றீர்கள் என்றால் நாம் செய்தி சேகரிப்பதற்கு உங்களுக்கு என்ன பயம்.

இதற்கு முதல் வந்த அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களுக்கு முன்பாகவே மதுபானசாலை உரிமையாளருடன் கலந்துரையாடியிருந்தனர்.

ஏன் நீங்கள் மட்டும் ஊடகங்களை வெளியேறுமாறு கூறி இரகசியமாக உள்ளே சந்திக்கப் போவதாக கூறுகின்றீர்கள் என கேள்வியெழுப்பினர்.

இந்த விவகாரத்தினால் தவிசாளருக்கும் ஊடகவியலாளருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறி மக்கள் போராடிய இடத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.