எங்களது நிலத்தை நீங்கள் வழங்கத் தவறினால், எமது நிலத்தை மீட்பதற்கு நாம் எமது உயிரை விடவும் தயாராக உள்ளோம் என மயிலிட்டி மக்கள் நேற்று முன்தினம் (26)சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
எமது நிலத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதுடன், மீன்பிடித் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாங்கள் எமது சொந்த மண்ணையும் இழந்து, ஒலைக் குடிசைக்குள் அவல வாழ்வு வாழ்ந்து வருவதோடு எமது வாழ்க்கைக்காக பழைய இரும்புகளை பொறுக்கி விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
6 மாதங்கள் தாருங்கள். உங்களுடைய சகல இடங்களையும் விடுகிறோம் என கடந்த ஜனவரி மாதம் சிறீலங்கா அதிபர் எம்மிடம் நேரில் தெரிவித்தார். ஆனால் அந்தக் கெடு முடிந்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இனியும் எங்களால் பொறுக்க முடியாது. எங்கள் நிலங்களை விடுவிக்காவிட்டால் பாராளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்துவோம். வேறு வழியில் தொடர் போராட்டங்களையும் முன்னெடுப்போம். எங்கள் நிலங்களை மீட்கும் போராட்டத்தில் நாங்கள் சாகவும் தயார் எனவும் உணர்சி வசப்பட்டு அந்த மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீரவிடம் தெரிவித்தனர்.