கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு, இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும் ஒரு சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள், நடந்து கொண்டிருக்கின்றன.
அட்மிரல் வசந்த கரன்னகொட, கடற்படைத் தளபதியாக இருந்தபோது, இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதுவும், அட்மிரல் கரன்னகொட தான், தனக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்த, ‘நேவி சம்பத்’ எனப்படும், லெப். கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக, முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.
தனிப்பட்ட முரண்பாடுகளின் அடிப்படையிலேயே, அந்த முறைப்பாடு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. சம்பத் முனசிங்கவின் அறையில் இருந்து, சந்தேகத்துக்குரிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அது குறித்துப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஆனால், அந்த விசாரணைகள் முறைப்படியாக முன்னெடுக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரே, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
கடத்தப்பட்ட இளைஞர்கள், திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ‘கன் சைட்’ என்ற வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டனர் என்றும், அவர்களை உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வைத்து, கப்பம் பெறப்பட்டது என்றும் தெரியவந்தது. கப்பம் பெற்ற பின்னர், அந்த இளைஞர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, கடலில் வீசப்பட்டனர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், ஏற்கெனவே 11 கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மாத்திரம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தநிலையில், இந்தச் சம்பவங்கள் நடந்தபோது, கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட, இவை குறித்து அறிந்திருந்தார் என்றும், ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடற்படை அதிகாரிகள் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.
இது தான் அட்மிரல் கரன்னகொடவுக்கு இப்போது வந்துள்ள சோதனைக்குக் காரணம் ஆகும். அவரை 14ஆவது சந்தேக நபராகச் சேர்த்து, அவர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.
அதற்கு முன்னதாக, அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் வாக்குமூலம் பெறுவதற்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முற்பட்ட போதும், அவர் தலைமறைவாக இருக்கிறார். அவர், கைது செய்யப்படப் போகிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையிலேயே, அவர் இருப்பிடத்தை விட்டு மறைந்திருக்கிறார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கைது செய்யமாட்டோம் என்று, வாக்குறுதி கொடுக்க முடியாது என, நீதிமன்றத்தில் கூறியிருந்த போதும், அவரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதாகவும் தெரியவில்லை.
அதேவேளை, தன்னைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, அட்மிரல் வசந்த கரன்னகொட, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தாமே முதலில் வெளிப்படுத்தியதாகவும் தன் மீதே குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அட்மிரல் வசந்த கரன்னகொட சமர்ப்பித்திருந்த மனுவில், இந்த விவகாரம் பற்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொட்டாபய ராஜபக்ஷவும் அறிந்திருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
கோட்டபாய ராஜபக்ஷ அரசியலில் இறங்கத் தயாராக இருக்கும் நிலையில், அவரையும் இந்த வழக்கில் கோர்த்து விட்டிருக்கிறார் அட்மிரல் கரன்னகொட.
பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ஷவும் இதனை அறிந்திருந்தார் என்றால், அது குறித்து அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை அவருக்கும் ஏற்படும்.
இதனை முன்கூட்டியே அறிந்து கொண்டதால் தானோ தெரியவில்லை, அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்யக்கூடாது என்று, மஹிந்த அணியினர் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருந்தனர். அவர்கள் தான், அட்மிரல் கரன்னகொட கைது செய்யப்படவுள்ளார் என்றும், ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்னர் அரசாங்கம் அவரைக் கைது செய்யப் போவதாகவும் கூறிவந்தனர். அதுமாத்திரமன்றி, அவரைக் கைது செய்யக்கூடாது என்றும், அதற்கு ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலை, இப்போது பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது. சட்டம், ஒழுங்கு அமைச்சை, ஐ.தே.க வசம் இருந்து பிடுங்கிக் கொண்டுள்ள அவர், ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு உள்ளாகி இருக்கிறார்.
பொலிஸ் திணைக்களம், ஐ.தே.கவின் வசம் இருந்தபோது, குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் படை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போது, அதை வெளிப்படையாக எதிர்த்தவர் ஜனாதிபதி சிறிசேன. போர் வீரர்களை அரசாங்கம் கைது செய்வதாகப் பகிரங்கமாகவே விமர்சித்தவர் அவர். தனக்குத் தெரியாமலேயே எல்லாமே நடப்பதாகவும் கூறியிருந்தவர்.
ஆனால் இப்போது, அவரிடமே, பொலிஸ் திணைக்களம் வந்திருக்கிறது, அவருக்குக் கீழ்த்தான் பாதுகாப்பு அமைச்சும் இருக்கிறது. முப்படைகளின் அதிபதியும் அவர் தான். ஆக, முப்படைகளின் அதிபதியாகவும் இருந்து கொண்டு, படையினருக்கு எதிரான விசாரணைகளை நடத்தும் பொலிஸ் திணைக்களத்தையும் வழி நடத்த வேண்டிய சிக்கலுக்குள் ஜனாதிபதி மாட்டிக் கொண்டிருக்கிறார்.
பொலிஸ் திணைக்களத்தை ஐ.தே.கவிடம் கொடுத்திருந்தால், இதே ஜனாதிபதி எப்படிப் பிரசாரங்களை செய்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கடினமில்லை. கடந்த காலங்களில் அதனைப் பார்த்தாயிற்று.
இப்போதைய நிலையில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட கைது செய்யப்படுவதற்கு, ஜனாதிபதி சிறிசேன உடன்பட்டிருந்தால், அந்தக் கைது எப்போதோ நிகழ்ந்திருக்கும். எவ்வாறாயினும், கைது செய்யப்படுவதில் இருந்து தான், ஜனாதிபதியால் காப்பாற்ற முடியுமே தவிர, நீதிமன்ற வழக்கில் இருந்து இலகுவாக அவரை விடுவிக்க முடியாது. விசாரணைகளில் வெளிவந்த தகவல்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கில் கரன்னகொட தப்பிக் கொள்வது இலகுவானதல்ல.
இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவங்களை அறிந்து கொண்ட பின்னரும், அட்மிரல் கரன்னகொட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உரிய நேரத்தில் விசாரணைகளை நடத்தி, நடவடிக்கை எடுத்திருந்தால், ஐந்து பேரையாவது காப்பாற்றியிருக்க முடியும் என்றும், இந்த வழக்கில் சாட்சியமளித்த அட்மிரல் கரன்னகொடவின் செயலாளராக இருந்த கடற்படை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் அட்மிரல் கரன்னகொடவுக்கு, நேரடித் தொடர்புகள் உள்ளதா என்று தெரியாவிடினும், அதனை அறிந்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என்பதே அவர் மீது விழும் பழி.
தனக்குக் கீழ் இருந்த படையினர் குற்றமிழைப்பதைத் தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ தவறும் கட்டளை அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது வழமை. அதிலிருந்து, அட்மிரல் கரன்னகொட தப்பிக்க முடியாது.
இந்த வழக்கில், கடற்படையினர் மீது வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம், சர்வதேச அரங்கில் நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ அண்மையில் வெளியிட்ட கருத்து இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அமர்வையும் கருத்தில் கொண்டே, அரசாங்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், மஹிந்த தரப்பு இதைப் படையினருக்கு எதிரான நடவடிக்கையாக, போர் வீரர்களைத் தண்டிக்கின்ற சர்வதேசச் சதியாக, புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சியாகப் பிரசாரம் செய்து வருகிறது.
போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்களில் இருந்து, படையினரைப் பாதுகாப்பது என்ற விடயம், அரசியல் செய்வதற்கான பிரதான உத்தியாகத் தெற்கில் மாற்றப்பட்டிருக்கிறது.
அட்மிரல் கரன்னகொடவை கைது செய்தால், அரசாங்கத்துக்கு எதிராகப் படையினர் திரும்புவார்கள் என்றும், அதன் மூலம், தாம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வென்று விடலாம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இதுவே, படையினரை முன்னிறுத்திய அரசியல், எந்தளவுக்கு முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.
-
கே. சஞ்சயன்