கேனான் 7 D மார்க் கேமரா, 150 – 600 லென்ஸ் அதோடு ட்ரைபேடு… இவையின்றி திவ்யபாரதி ராமமூர்த்தியைப் பார்க்க முடியாது. முதுகலை ஆங்கிலம் படித்தாலும், இவரின் முழு ஆர்வம் போட்டோகிராபி பக்கம்தான். பொழுதுபோக்கிற்காக படங்கள் எடுக்கத் தொடங்கியவர், ஒரு கட்டத்தில் அதை விட்டு விலகமுடியாதளவு நேசிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக, கானுயிர்ப் புகைப்படக்காரராக உலா வரும் திவ்யபாரதி, இயற்கை சார்ந்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டுவருகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஆர்வத்துடன் போட்டோகிராபி மற்றும் இயற்கையைக் காத்தல் குறித்து உரையாடும் திவ்யபாரதியிடம் பேசினேன்.
“கானுயிர் போட்டோகிராபி மீது ஆர்வம் வந்தது எப்படி?”
“காடு, இயற்கை, பறவைகள், பட்டாம் பூச்சிகள், விலங்குகள் உயிரினங்கள் இவற்றை யாருக்குத்தான் பிடிக்காது. எனக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். அவற்றையெல்லாம் கேமராவில் கொண்டுவர ஆசைப்பட்டேன். நாம் பிறந்ததிலிருந்து இந்த இயற்கையை ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த கேமிரா வழியே பார்க்கும்போது அதன் அழகு இன்னும் ஈர்க்கிறது. பிறகு மனதுக்குப் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. போட்டோஸ் எடுக்கப் போகும் ஒவ்வொரு இடத்திலும் நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கும். சில சாகசப் பயணமாகவும் அமைந்துவிடும். இதையெல்லாம் ரசிக்க, கானுயிர்ப் புகைப்படம் என்கிற பாதை நல்ல அடித்தளமாக இருந்தது.”
“காட்டுக்குள் செல்வதற்கான பயிற்சி, வன உயிர்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும் இல்லையா..?”
“எந்த விலங்கு, எந்தப் பறவை அதை எந்த ஷாட்டில் எடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட வேண்டும். காட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால், காட்டின் இயக்கம், இயல்பு, வெளிச்சம், காலநிலை போன்றவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகள்தாம் நம் இயற்கையின் நிலையை அடிக்கடி மனிதர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. ஒரு மனிதனுக்கு அனைத்து அறிவுகளை விட இயற்கை குறித்த அறிவுதான் முக்கியம் என்பது என் எண்ணம். அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளையும், காட்டுயிர் விலங்குகளையும் படங்கள் எடுத்து மக்களிடம் கொண்டு செல்வதுமூலம், இவற்றைக் குறித்து ஒரு விழிப்புணர்வு நம் சமூகத்தில் உருவாகும் என்று நம்புகிறேன்”
“உங்களின் விருப்பத்துக்கு வீட்டினரின் ஒத்துழைப்பு கிடைக்கிறதா?”
“என் அப்பா சூழலியல் எழுத்தாளர். அதனால்தான் எனக்கு இயற்கை மீது அதிக ஆர்வம் வந்தது என்று நினைக்கிறேன். கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே பயணிக்கத் தொடங்கிவிட்டேன். நான் செல்லும் பயணங்களையும் எடுக்கும் போட்டோகளையும் என் வீட்டினர் மகிழ்ச்சியோடு பாராட்டுவார்கள். உறவினர்களிடம்கூட என்னைப் பற்றிப் பெருமையாகத்தான் சொல்வார்கள். பறவைகள், விலங்குகள் பற்றிய முழு விவரத்தையும் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்வது வரை அப்பா உதவுவார். என் குடும்பம் தரும் முழுச் சுதந்தரம்தான் இயற்கை குறித்த ஆவணத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் என் நோக்கத்தை எளிதாக்கி வருகிறது”
“இப்படியான பின்புலம் இல்லாத பெண்களும் இதில் ஈடுபட முடியுமா?”
“பெண்களும் எல்லாத் துறைகளிலும் சிறப்பாக இடம்பிடித்துவருகிறார்கள். காட்டுயிர்ப் புகைப்படக்காரராக, மூலதனம் அவசியமானது. ஆர்வம், பொறுமை, உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செயல்பட முடியும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் துறையில் சாதிக்க முடியும். நான் மற்ற பெண்களுக்குக் கொடுக்கும் ஒரேயொரு அட்வைஸ் என்னவென்றால், இத்துறையின் மீது விருப்பம் என்றால், உங்கள் வீட்டில் சொல்லி புரிய வையுங்கள். பணத்திற்காக ஓடும் இந்தச் சமூகத்தில் இயற்கை காட்டுயிர்ப் புகைப்படக்காரர் எனத் தனித்து நில்லுங்கள். அதுவே உங்கள் அடையாளமாகக் கொள்ளுங்கள்”
“இந்தத் துறையில் அதிகளவில் ஆண்களும் ஈடுபட்டு வருகையில், பெண்கள் தனித்து நிற்பது எப்படி?”
“இந்தத் துறையில் ஆண், பெண் வேறுபாடுகள் எதுமில்லை. ஒருவர் வைத்திருக்கும் எக்யூப்மென்ட்ஸ் மாறலாம். ஆனால், படங்கள் வேறுபடுவதில்லை. உடல் அளவில் பெண்களை விட, அவர்களுக்குச் சற்று வலு அதிகம்தான் என்றாலும், பெண்கள் தம்மை பலவீனமாகக் கருதிக்கொள்ள கூடாது. எல்லாத் துறைகளிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றையெல்லாம் தாண்டி, அரிய புகைப்படம் ஒன்றை நீங்கள் எடுத்துவிட்டால், அது தரும் புத்துணர்ச்சிக்கு ஈடு இணையில்லை”
“நீங்கள் எடுத்த புகைப்படங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?”
“என்னுடைய எல்லாப் படங்களும் பிடிக்கும் என்றாலும், albino whiskered bulbul பறவையின் படம் ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், அந்தப் பறவை மிக அரிதாகத் தென்படக்கூடியது. அதைச் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பார்த்தபோது ரசித்து எடுத்தேன். எப்போதாவது கண்ணில் படும் பறவையை, அநேகமாக எனக்குத் தெரிந்து வேறு யாரும் எடுக்கவில்லை.”
“உங்களின் பயணத்தில் எதைத் தேடிச் செல்லும்போது ரொம்ப சாகசமானதாக இருந்தது?”
“நான் சென்ற அனைத்து இடங்களுமே சாகசம் நிறைந்ததுதான். தேடிச் செல்வதைப் பற்றிய கல்வியையும், செல்லும் இடத்தைப் பற்றிய புரிதலும் இருந்தால் சமாளித்துவிடலாம். ஒருமுறை saheen falcon என்ற பறவையைப் படம் எடுக்க அவலாஞ்சி வரை சென்றதே என் வாழ்க்கையில் ரொம்ப த்ரிலிங்கான பயணம். அந்தப் பறவையின் ஒரு தனிச்சிறப்பு, மலையின் இடுக்கில்தான் கூடுகட்டும். அதைப் படம் எடுக்க வேண்டும் என்றால், அவலாஞ்சி எஸ்டேட் முனை வரை செல்ல வேண்டும். ஆனால், அவ்வளவு தூரம் சென்றும் அந்தப் பறவையைப் படம் எடுக்க முடியாமல் திரும்பியது ஏமாற்றமாக இருந்தது. அதேபோல, Great hornbill என்ற பறவையைப் படம் எடுக்க, ஆனைமலையில் இரண்டு நாள்கள் காத்திருந்ததையும் சொல்ல வேண்டும். இரண்டு நாள் முழுவதும் சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் அந்தப் பறவையின் கூட்டின் அருகிலேயே காத்திருந்து படங்கள் எடுத்தோம்.”
“எங்குச் சென்று படங்கள் எடுப்பது உங்கள் கனவாக இருக்கிறது?”
“ஆப்பிரிக்காவில் உள்ள மசை மரா (masai mara) செல்லவேண்டும் என்பது என் கனவு. அங்குள்ள விலங்குகளை என் கேமரா வழியே பார்க்க வேண்டும் என்ற லட்சியம் விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் செல்ல வேண்டும். அங்குள்ள யானைகளுக்கு எனத் தனிச் சிறப்பு வாய்ந்த ஜிம்கார்பேட் என்ற இடத்திற்கும் செல்ல வேண்டும்.”
“பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று பேசுவதன் நோக்கம் பற்றி…”
“தொடக்கத்தில் பொழுதுபோக்கிறாகத்தான் வகுப்புகள் எடுக்கச் சென்றுகொண்டிருந்தேன். இப்போது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இயற்கை, உணவுச் சங்கிலி, பல்லுயிர் குறித்து அதிகம் பேசுகிறேன். பள்ளியோ கல்லூரியோ மாணவர்களின் ஆர்வம்தான் இன்னும் பல தகவல்களைச் சேகரித்துச் செல்லத் தூண்டுகிறது. இயற்கையைக் காப்பதற்கான பொறுப்பைப் பெரியவர்களிடம் சொல்வதை விட, மாணவர்களிடம் சொல்லும்போது நிச்சயம் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன். பொதுவாக நான் ஒன்றை மட்டும்தான் மற்றவர்களிடம் கேட்பேன். இயற்கையைக் காக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதைச் சீரழித்துவிடாதீர்கள்!”