அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெயார் பெக்ஸ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் மேலதிக விபரங்களை வழங்குமாறு கோரியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என அவுஸ்திரேலிய ஊடகம் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஸ்னோவே மவுன்டன் என்ஜினியரிங் கம்பனி என்ற நிறுவனத்திடம் 2.5 மில்லியன் ரூபா லஞ்சமாக கோரியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு பற்றி ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது எனவும் அவரது அலுவலகப் பணியாளர்கள் எவரும் தொடர்புபட்ருடிக்கின்றார்களா என அறிந்துகொள்ள மேலதிக விபரங்கள் தேவைப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
யார் தொடர்பு கொண்டது, எவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டது, எப்போது இந்த சம்பவம் நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஜனாதிபதி முற்று முழுதாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.