வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவில் வாக்ரிஷா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில், அலுவலகத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றைத் தொடர்ந்து அங்கு வருகை தந்து இருந்த பெண்கள், கறுப்பு கொடிகளைப் பறக்க விட்டு அரசுக்கு எதிரான தமது கோசங்களை எழுப்பி, எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி,

“இம்முறை நாம் சர்வதேச மகளிர் தினத்தை கறுப்புத் தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளோம். காரணம், பெண்களாகிய எங்களுக்கு விடுதலை இல்லை, சுதந்திரமில்லை.

“இன்று எமது கணவன்மார்களையும் உறவுகளையும் தொலைத்து, 10 வருடங்களாகியும்  உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை.

“பெண்களாகிய எங்ளுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கின்றதோ எமது உறவுகள் என்று வருகின்றார்களோ அல்லது நியாயமான தீர்வு கிடைக்கின்றதோ அன்றுதான் நாம் இந்த சர்வதேச மகளிர் தினத்தை மகிழ்சியாகக் கொண்டாடுவோம்” என்றார்.