அம்பேத்கர் குறித்த ஆவணப் படம் தயாரிக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்

‘பி.ஆர். அம்பேத்கர் இன்றும் நாளையும்’ என்ற பெயரில் அம்பேத்கர் குறித்த ஆவணப் படமொன்றை தயாரிக்கவுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

‘காலா’ படத்தைத் தொடர்ந்து, இந்தி படமொன்றை இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் பா.இரஞ்சித். மேலும், ‘பரியேறும் பெருமாள்’ படத் தயாரிப்பைத் தொடர்ந்து ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பி.ஆர்.அம்ப்தேகர் இன்றும் நாளையும்’ என்ற ஆவணப்படத்தை தயாரிக்கவுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். இதனை ஆவணப் பட இயக்குநர் ஜோதி நிஷா இணைந்து தயாரிக்கிறார்.

90 நிமிடங்கள் நீளமுள்ள இந்த ஆவணப் படத்தில் அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்திரம், இந்தியாவில் புராணங்கள்,  இந்திய அரசியலில் சாதி நிறுவனமாக்கப்பட்டது, இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை ஆகியவை உள்ளிட்ட பலவற்றை ஆவணப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், பேரணிகள், ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் பேட்டிகள், தலித் அரசியல் களத்தில் இயங்கும் படைப்பாளிகளின் பேட்டிகள் என பல வருடங்களாக தான் சேகரித்து வைத்ததை இப்படத்தில் இணைக்கவுள்ளார் இயக்குநர் ஜோதி நிஷா.

இந்த ஆவணப் படம் இயக்குநர் பா.இரஞ்சித் கூறியிருப்பதாவது:

”இந்திய இலக்கியங்கள் மற்றும் சினிமாவில் நாயக கண்ணோட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டவற்றை இதில் ஆவணப்படுத்த இருக்கிறோம். குறிப்பாக வெகுஜன ஊடகங்கள் பேச மறுத்த வரலாறுகளைப் பதிவு செய்கிறோம்.

சமூக அரசியல் சூழல் மாறியிருக்கும் இந்நேரத்தில் ‘பி.ஆர் அம்பேத்கர் – இன்றும் நாளையும்’ ஆவணப்படம் பெண்ணிய நிலைப்பாட்டில் இருந்து சமூகப் புரட்சியையும், பெரும்பான்மை மக்களின் வாழ்விடம் மற்றும் பார்வை குறித்தும் பேச இருக்கிறோம். இந்த ஆவணப்படம் நிச்சயம் வரலாற்றை எழுதும், இதில் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி”.

இவாறு பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

‘பி.ஆர்.அம்பேத்கர் இன்றும் நாளையும்’ ஆவணப் படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாராகவுள்ளது.