அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளரின் மரணம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் ஜனவரி இறுதியில் உயிரிழந்திருந்த பின்னணியில் கடந்த 6 வாரங்களுக்குள் அங்கு இடம்பெற்றுள்ள 2வது உயிரிழப்பு இதுவெனக் கூறப்படுகிறது.

ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சடலமாக தனது அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனத் தெரிகிறது.

குறித்த நபரின் சடலம் மரணவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விலவூட் தடுப்பு முகாமில் தொடர்ச்சியாக மரணங்கள் அரங்கேறுவதனை அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறித்த தடுப்பு முகாமில் தொடரும் மரணங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை உடனடியாக நடைபெறவேண்டுமென கோரப்பட்டுள்ளது.