சுன்னாகம் காவல்துறையினர் 5 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு வழக்கு

சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஐந்து காவல்துறையினருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி 5 இளைஞர்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் வைத்து அடித்து, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தபோது அதில் சிறிஸ்கந்தராசா சுமணன் எனும் இளைஞர் உயிரிழந்தார்.

இதனையடுத்து சித்திரவதையின்போது உயிரிழந்த இளைஞரின் உடலை இரணைமடுக் குளத்தில் எறிந்துவிட்டு, திருட்டுப் பொருட்களை மறைத்துவைத்த இடத்தைக் காட்டுவதற்காக அழைத்துச்சென்றவேளை அவர் தப்பியோடி குளத்தில் வீழ்ந்து மரணமானார் எனக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த திருட்டு வழக்கு கடந்த மாதம் 25ம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னையிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதன் போது தமது சட்டத்தரணியின் ஊடாக தமது நண்பனை சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டாரவும் (தற்போது கொடிகாம காவல்துறை பொறுப்பதிகாரி) அவருடன் இணைந்து மூன்று தமிழ் காவல்துறையினர் உட்பட எட்டு பேர் பொய் குற்றசாட்டு சுமத்தி தம்மை கைது செய்து சித்திரவதை பண்ணியதாகவும், அதில் தமது நண்பன் உயிரிழந்ததாகவும், உயிரிழந்த நண்பனின் உடலை இரணைமடுக் குளத்தில் வீசி விட்டு தற்கொலை என காவல்துறையினர் கூறியதாகவும் மன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினரை உடனடியாக கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்நிலையில், குறித்த வழக்கு நேற்றயைதினம் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாண மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் சார்பாக பிரதான காவல்துறை பரிசோதகர் மன்றில் முன்னிலையானார்.

அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை மன்றில் முன் வைத்தார்.

அதில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேரில் ஐவருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் , அதேவேளை குறித்த எட்டு காவல்துறையினருக்கு எதிராகவும் சித்திரவதை குற்றசாட்டு சுமத்தி யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டு உள்ளதாக மன்றில் முன்னிலையான பிரதான காவல்துறை பரிசோதகர் தெரிவித்தார்.அதனை அடுத்து வழக்கு எதிர்வரும் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.