ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இப்போராட்டம் குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்காக அணி திரளுமாறு பொது அமைப்புகள் மற்றும் மதகுருமாரை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளதுடன், ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளது எனவும் ஒன்றியம் கூறியுள்ளது.
அத்தகைய இனச்சுத்திகரிப்பிற்கான பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தர எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015ல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை இதுவரை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எனவே மேலும் காலநீடிப்பை கோர இலங்கை அரசாங்கம் முற்படுவது வெறும் கண்துடைப்பு நாடகம் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.