பின்லேடன் மகன் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது ஐ.நா!

சவுதி அரேபிய அரசு குடியுரிமையை ரத்து செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக்குழு பின்லேடன் மகன் ஹம்ஸா பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில் அமெரிக்கா மீதும், அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவேன் என அவரது இளைய மகன் ஹம்ஸா பின்லேடன் 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஹம்ஸா பின்லேடன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.7 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. சவுதி அரேபிய அரசும் அவரது குடியுரிமையை ரத்து செய்து விட்டதாக நேற்று முன்தினம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஹம்ஸா பின்லேடன் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐ.நா. பாதுகாப்புக்குழு சேர்த்துள்ளது. இதனால் அவர் இனி சர்வதேச அளவில் பயணம் செய்ய முடியாது. அவரது சொத்துக்களும் முடக்கப்படும்.

அத்துடன் ஆயுதங்கள் விற்பனைக்கும் தடைவிதிக்கப்படும். தற்போது அல்கொய்தா பயங்கரவாத அமைப்பிற்கு அய்மான் அல்- ஜவா கிரி தலைவராக இருக்கிறார். பின்னர் இந்த அமைப்பின் தலைவராக ஹம்சா பின்லேடன் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.