“நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்”

நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையும் விவாதத்துக்கு உள்ளாகிறது. இது வருத்தப்பட வைக்கும் விஷயங்கள். நாட்டில் நல்லவைகள் இருக்கின்றன. அதைப்பற்றி அதிகமாக பேசுவதுதான் வரவேற்க கூடியதாக இருக்கும். ‘பிரம்மோற்சவம்’ (தெலுங்கு) படத்தில் சத்யராஜ், “நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம், படத்தில் அடிக்கடி வரும். எனக்கு அந்த வசனம் மிகவும் பிடிக்கும்.

சிலர் மற்றவர்களை பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கேலி-கிண்டல் செய்வார்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவார்கள். இது மோசமான பழக்கம் ஆகும். இப்படிப்பட்டவர்களை எனக்கு அறவே பிடிக்காது. நிறைய நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அதை தேடிக் கண்டுபிடித்து பேசலாம்.

மற்றவர்களை குறை பேசி திரிவதால் எந்த பயனும் இல்லை. நான் நல்லவைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்படி பேசுவதன் மூலம் நல்ல சிந்தனைகள் உருவாகும். அது உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

சமூகத்தில் தினமும் கொலை-கொள்ளைகள் நடக்கின்றன. அவைகள் செய்திகளாகவும் வருகிறது. ஒவ்வொருவரும் நல்ல விஷயங்களை பேசுவதன் மூலம் நல்ல நடத்தைகளில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் சமூக விரோத சம்பவங்கள் நடப்பது தவிர்க்கப்படும். நாம் ஒவ்வொருவரும் நல்ல விஷயங்களை பேசுவதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு சமந்தா கூறினார்.