புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க கடும் போட்டி!

புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சம்பவத்தை இந்தியில் உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 11-ந்தேதி வெளியான இந்த படத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த பிப்ரவரி 14-ந்தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள்ளேயே சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது.
அதில் ஒன்றான பாலகோட் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடன் தங்கி இருந்த அபோதாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நாடுமுழுக்க பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அடிப்படையிலும் படம் எடுக்க இந்தி சினிமாக்காரர்கள் தயாராகிவிட்டனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள இந்தியன் மோ‌ஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்பை பதிவு செய்ய 5-க்கு மேல் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போட்டி போட்டுள்ளனர்.
புல்வாமா தி டெரர் அட்டாக், புல்வாமா வெர்சஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 மற்றும் பாலகோட், வார் ரூம், இந்துஸ்தான் ஹமாரா ஹை உள்ளிட்ட பல தலைப்புகளை பதிவு செய்ய முயன்றுள்ளனர். விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.