ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது.
பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அஹமட் பிரபு, இதை மீண்டும் உறுதி செய்திருந்தார்.
அவர், ஜெனீவாவில் உரையாற்றுவதற்குச் சில மணி நேரம் முன்னதாக, வடக்கில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்தும், மீண்டும் இலங்கைக்கு காலஅவகாசம் அளிக்கப்படக் கூடாதென்பதை வலியுறுத்தியும் வடக்கு மாகாணம் முழுவதிலும், முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது, அத்துடன் ஆயிரக்கணக்கானோர் கிளிநொச்சியில் ஒரு பேரணியையும் நடத்தியிருந்தனர்.
2015ஆம் ஆண்டும், 2017ஆம் ஆண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம், இப்போது, அந்த இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாகவும் கூட, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இணை அனுசரணையை விலக்கிக்கொள்வது தொடர்பாக, வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.
இப்படியானதொரு சூழலில் தான், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அஹமட் பிரபு, இலங்கை தொடர்பான இன்னொரு பிரேரணையைத் தமது நாடு கொண்டு வரப்போவதாகக் கூறியிருக்கிறார்.
ஜெனீவாத் தீர்மான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், சில மெதுவான முன்னகர்வுகளை, இலங்கை மேற்கொண்டிருப்பதற்குப் பாராட்டுத் தெரிவித்திருந்த அவர், அதேவேளை, தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டத்தில், ஜெனீவாவில், பிரித்தானியா கொண்டு வரப்போகும் புதிய தீர்மானம் எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைக்கவுள்ள பிரித்தானியா, அதற்கான முன் வரைவை இன்னமும் வெளியிடவில்லை. எதிர்வரும் ஐந்தாம் திகதி, ஜெனீவாவில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதி, ஒரு பக்க அமர்வை ஒழுங்கு செய்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்குச் சமாந்தரமாக நடக்கும், இந்தப் பக்க அமர்வில், இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள தீர்மான வரைவு குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.
இதற்குப் பின்னர், மேலும் குறைந்தது, இரண்டு பக்க அமர்வுகளை நடத்தும் திட்டம், பிரித்தானியாவிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைவிட, அதிகமான பக்க அமர்வுகள் நடத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், பிரித்தானியா கொண்டு வரப்போகும் தீர்மானம் தொடர்பான, ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு, அதிகளவு இராஜதந்திர முயற்சிகள் தேவைப்படலாம்.
இந்தக் கட்டத்தில் தான், பிரித்தானியாவால் இம்முறை கொண்டு வரப்படும் தீர்மானம், கனதியானதும் கடுமையானதும் ஆக இருக்காது என்ற கருத்தை, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா முன்வைத்திருக்கிறார்.
ஜெனீவாவில், 30 / 1, 34 / 1 என இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து விட்டு, ஏமாற்றி விட்ட இலங்கை அரசாங்கத்துக்குக் கூடுதல் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களிடம் இருக்கின்ற போதிலும், ஏற்கெனவே ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விடக் கனதி குறைவான தீர்மானம் ஒன்றே, இம்முறை நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் உள்ளன என்பதே, அரசசார்பற்ற நிறுவனங்களின் கணிப்பாக உள்ளது.
இலங்கை அரசாங்கம், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில முன்னேற்றங்களைக் காண்பித்திருக்கிறது என்பது இதற்குக் கூறப்படுகின்ற ஒரு காரணமாகும்.
காணாமல் போனோருக்கான பணியகம், இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகம், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட சில வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாவிடினும், அதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறது என்பது, இலங்கைக்கு சாதகமாக உள்ளது,
இலங்கையின் தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தைப் போன்று, சீனா, ரஷ்யாவின் பக்கம் சார்ந்ததாக அல்லாமல், மேற்குலகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது.
இலங்கையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், தற்போதைய அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு அழுத்தங்களைக் கொடுத்து, அதனைப் பலவீனப்படுத்தக் கூடாது என்பது இன்னொரு காரணம்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல, தற்போதைய அரசாங்கம் இல்லை. இதற்குச் சர்வதேச அளவில் ஆதரவு உள்ளது. சர்வதேச அளவில், உறவுகளைப் பலப்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவது, பிரித்தானியாவுக்குச் சிக்கலாக இருக்கும். இது மூன்றாவது காரணம்.
இதற்கு முன்னர், அமெரிக்கா தீர்மானங்களை முன்வைத்த போது, தட்டிக்கழிக்காத பல நாடுகள், பிரித்தானியாவின் கோரிக்கையை ஏற்று வாக்களிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, எனவே, இலங்கையுடன் இணைந்து, அதற்கு அழுத்தம் கொடுக்காத வகையிலான ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் தான், பிரித்தானியாவால் இந்த முயற்சியில் வெற்றி பெறமுடியும். இல்லையேல், தோல்வியடையும் வாய்ப்புகளும் உள்ளன. இதுவும் ஒரு காரணம்.
இவ்வாறு பல காரணங்களின் அடிப்படையில் தான், இம்முறை ஜெனீவாத் தீர்மானம் வலுவான ஒன்றாக, இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கின்ற ஒன்றாக இருக்காது என்பது பலரதும் கணிப்பாக உள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பு, பொறுப்புக்கூற வேண்டிய தரப்பு ஆகிய இரண்டு தரப்புகளையும் ஒரே கோட்டில் கொண்டு வந்து நிறுத்துவதில், பிரித்தானியாவால் வெற்றபெற முடியுமா என்பது இப்போதுள்ள பிரச்சினை.
இலங்கை அரசாங்கம், தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடு. காணாமல் போனோர் பணியகம் உருவாக்கப்பட்ட போதும், அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு பிரச்சினையைத் தானும் தீர்க்க முடியவில்லை.
அதுபோன்று தான், இலங்கை அரசாங்கம் உருவாக்கிய நல்லிணக்கப் பொறிமுறைகள், திட்டங்கள் எல்லாமே வெளிப்பார்வைக்கு முன்னேற்றங்களாகத் தெரிந்தாலும், அவை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வைத் தருவனவாக அமையவில்லை. இந்தப் பின்னணியில் தான், அவர்கள் இலங்கைக்கு மேலும் காலஅவகாசத்தைக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஆனால், சில முன்னேற்றங்களை வைத்துக் கொண்டு, காலஅவகாசம் கொடுக்கின்ற நிலைப்பாட்டில், பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இருக்கின்றன.
இலங்கையின் ஒப்புதலுடன் தீர்மானத்தைக் கொண்டு வந்தால் தான் அதனை நிறைவேற்ற முடியும் என்றொரு சூழலும் இருக்கிறது.
இந்தநிலையில், ஏற்கெனவே இரண்டு தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரைணையில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவை, இலங்கை அரசாங்கம் எடுக்குமானால், பிரித்தானிய உள்ளிட்ட இணை அனுசரணை நாடுளுக்கு ஜெனீவாவில் சவால்கள் அதிகரிக்கும். இலங்கை அரசாங்கமே கோராமல், அதற்குச் சாதகமான ஒரு தீர்மானத்தையே முன்வைக்க வேண்டிய நிலைக்கு, பிரித்தானியா தள்ளப்படும்.
அவ்வாறு இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்காத, இலங்கையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு தீர்மானத்தை மீண்டும் ஜெனீவாவில் கொண்டு வருவதன் மூலம், பிரித்தானியாவாலோ அதன் நட்பு நாடுகளாலோ எதையும் சாதிக்க முடியாது. அதுபோலவே பாதிக்கப்பட்ட தரப்புகளினதும் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தான் அந்த நாடுகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை என்பது நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்ற ஒரு சபை அல்ல. இதன் ஊடாக, ஏற்கெனவே இலங்கைக்கு ஓரளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் கூட, இந்தியா போன்ற நாடுகளால் தடுக்கப்பட்டு விட்டது. இப்படிப்பட்ட நிலையிலும், இலங்கை அரசாங்கம் சர்வதேச அளவில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டுள்ள சூழலிலும், ஜெனீவா களத்தில் தமிழர்களுக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தென்படவில்லை.
-
கே. சஞ்சயன்