இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.
அபினந்தனை விடுவிப்பதற்காக இந்தியா ராஜாங்கரீதியாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.