தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நக்மா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வருவதாக தெரிவித்துள்ளார்.
1990-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்த நக்மா காங்கிரசில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து நக்மா கூறியதாவது:-
“தென்னிந்திய திரையுலகில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. ரஜினியுடன் நடித்த பாட்ஷா மற்றும் காதலன் உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கிலும் வெளியானது. முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறேன். நான் சிறப்பாக நடனம் ஆடுவதாகவும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.

2002-ல் ஒரு தெலுங்கு படத்தில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தேன். 2007 வரை பெங்காலி, போஜ்பூரி, இந்தி படங்களில் நடித்து இருக்கிறேன். அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். எல்லா மொழி படங்களிலும் நடிக்க திட்டமிட்டு உள்ளேன்.
தற்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் ஒரு படத்தில் அல்லு அர்ஜுன் அம்மாவாக நடிக்கிறேன். திரி விக்ரம் இயக்குகிறார். தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடிக்கவும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal