அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரணிதா. அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது அடுத்து தமிழில் முன்னணி நடிகை யாகி விடுவார் என்று கோடம்பாக்கமே எதிர்பார்த்தது. ஆனால் சகுனி தோல்வியடைந்ததால் பின்னர் பிரணிதாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் பெருத்த ஏமாற்றத்துடன் மீண்டும் கன்னட சினிமாவுக்கு சென்று நடித்து வந்த அவருக்கு சூர்யாவுடன் நடித்த மாசு என்கிற மாசிலாமணி படமும் கைகொடுக்க வில்லை.
இருப்பினும், தமிழில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என்று தொடர் முயற்சி காரணமாக தற்போது ஜெய் நடிக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள், அதர்வா நடிக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜெய் படத்தில் அஞ்சலி முதன்மை நாயகியாக நடிக்க பிரணிதா இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். அதேபோல் அதர்வா நடிக்கும் படத்தில் ரெஜினா, அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய ஹீரோயினிகளாக நடிக்க, பிரணிதா சிறிய ரோலில்தான் நடிக்கிறார்.
இருப்பினும் இதுவரை தமிழில் தான் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில், இந்த படங்களில் ஒன்று வெற்றி பெற்றாலும் தன்மீது விழுந்துள்ள தோல்விப்பட நடிகை என்கிற இமேஜ் மறைந்து வெற்றிப்பட நாயகி இமேஜ் விழுந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் நடித்து வருவதாக சொல்லும் பிரணிதா, தமிழில் எனக்கான இடம் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று உறுதிபட சொல்கிறார்.