ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தை இயக்கும் முயற்சியில் பல்வேறு இயக்குநர்களும் இறங்கியிருக்கும் நிலையில், விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் `தலைவி’ என்ற பெயரில் உருவாகுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
படம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது,
“தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் “தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்” என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்றார்.
விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.