அவுஸ்திரேலியா அணியின் கப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு

சிறீலங்கா  அணிக்கெதிராக மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலியா அணியின் கப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணி சிறீலங்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் கப்டனாக உள்ளார்.

இவர் தலைமையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 0-3 என தோற்று ஒயிட்வாஷ் ஆனது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, நேற்றைய 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 3-வது போட்டியும், ஒருநாள் தொடர் முடிந்த பின்னர் டி20 தொடரும் நடைபெற இருக்கிறது. மீதமுள்ள இந்த ஐந்து போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணியின்  கப்டன் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வார்னர் கப்டனாக செயல்பட இருக்கிறார். இவர் ஏற்கனவே, துணை கப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா தொடருக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் விளையாட இருக்கிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவதற்காக ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.