பொதுவாகவே குயில்களுக்கு கூடுகட்டி வாழும் பழக்கம் கிடையாது. இவையும் அப்படியே. இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் சாதுர்யமான ஓர் அரசியலைக் கடைப்பிடிக்கும்.
உங்கள் வீடுகளைச் சுற்றி மரங்கள் இருக்கின்றனவா? இருந்தால் நீங்கள் அவர்களின் இசையை நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள். அந்த இசை உங்கள் காதுகளை ஊடுருவி மூளைக்குள் நுழைந்து அதிகாலையிலேயே அரை மயக்க நிலைக்குக் கொண்டு போவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அந்தப் பரவசத்தை இதுவரை உணரத் தவறிவிட்டீர்களா? தொடர்ந்து படித்து அந்த இன்னிசைக்குச் சொந்தக்காரர்களான ஆசிய குயில் குறித்த அறிமுகத்தோடு இனி ரசிக்கத் தொடங்குங்கள்.
பல பறவைகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல தோற்றம் கொண்டவையாக இருக்கும். அதில் ஒன்றுதான் ஆசிய குயில். புதுச்சேரியின் மாநில பறவை. இது காகத்தை ஒத்த தோற்றம் கொண்டது. இந்தப் பறவையை நகர்ப்புறங்களில் அரிதாக மட்டுமே காணமுடியும். ஆசிய நாடுகளுக்கு உரித்தான இந்தப் பறவை குயில் இனத்தைச் சேர்ந்தது. குறிப்பாக தெற்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. அடர்ந்த காடுகளிலும், வனப்பகுதிகளிலும் அதை ஒட்டிய கிராமங்களிலும் இவற்றை அதிகமாகக் காணமுடியும். இந்தக் குயில் அதிக சத்தமாகக் கூவும் தன்மை கொண்டது. அது காடு முழுவதும் கேட்கும்படி எதிரொலிக்கக் கூடியதாக இருக்கும். மற்ற குயில்கள் எழுப்பும் ஒலிக்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கும். பறந்து வந்து ஓர் இடத்தில் அமர்கிறபோது, அமர்வதற்கு முன்பே இறக்கைகளைச் சுருக்கி அமரும் பண்பு கொண்டது.
இதைக் காளகண்டம் என்றும் அழைக்கின்றனர். ஆண் குயிலானது கறுப்பு நிறத்திலும், அலகு மஞ்சள் நிறமாகவும், கண்கள் சிவப்பு நிறத்திலும் காணப்படும். பெண் குயில் பழுப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் காணப்படும். பெரும்பாலான நேரங்களில் தனது இணையுடன் காணப்படும். இனிமையான குரலுக்கு எடுத்துக்காட்டாகவும் இந்தப் பறவையை சொல்வதுண்டு. பொதுவாகக் குயில்களில் பெண் குயில்கள்தான் அதிக இனிமையாகக் குரல் எழுப்பும் எனப் பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. ஆனால், ஆசிய குயில்களில் இனிமையான குரல் எழுப்புவது ஆண் குயில்கள்தான். இந்தக் குயில் பாடுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கூவ ஆரம்பிக்கும்போது மெல்லிய குரலுடன் ஆரம்பிக்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்துச் சட்டென்று நிறுத்தி மீண்டும் மெதுவாக ஆரம்பிக்கும்.
ஆண் குயிலோடு ஒப்பிட்டால் பெண் குயிலின் கூவல் அவ்வளவு ஈர்ப்போடு இருப்பதில்லை. வசந்த காலம்தான் ஆசியக் குயில்களின் இனப்பெருக்க காலம். அப்போதுதான் அவை இனிமையான குரல்களை எழுப்புகின்றன. ஆசிய குயில்களுக்குப் பெரும்பாலும் பழங்கள், நெல்லி மாதிரியான சிறு கனிகளும், கம்பளிப் புழுக்களும், பூச்சிகளும்தான் குயில்களின் உணவு. இந்த உணவுகளைத் தேடித்தேடி உண்ணும் அவற்றின் அழகை ரசித்தபடியே பறவையாளர்கள் மணிக்கணக்கில் நேரம் போவது தெரியாமல் நிற்பதுண்டு. அதுவும் இணையாக இரைதேடுகையில் நடக்கும் சிறுசிறு சண்டைகளும் காதல் கொஞ்சல்களும் அடடா ரகம்.
பொதுவாகவே குயில்களுக்கு கூடுகட்டி வாழும் பழக்கம் கிடையாது. இவையும் அப்படியே. இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் சாதுர்யமான ஓர் அரசியலைக் கடைப்பிடிக்கும். இனப்பெருக்க காலங்களில் ஆண் குயிலானது காகத்தின் கூட்டை தேடிச்சென்று அந்தக் கூட்டிலுள்ள முட்டையைத் திருடிச் செல்லும். காகம் கோபமாகி ஆண் பறவையை துரத்திச் செல்லும்போது, பெண் குயிலானது காகத்தின் கூட்டில் தனது முட்டையை இட்டுவிடும். இதுதவிர, காகம் திரும்பி வந்தால் மறுபடியும் முட்டையை எண்ணிப் பார்க்குமல்லவா? அப்போது முட்டைகள் அதிகமாக இருந்தால் விஷயத்தை யூகித்துத் தன் முட்டையை உடைத்துவிட்டால் என்ன செய்வது. அதற்கும் ஒரு தந்திரத்தைக் கையாள்கின்றன இந்த ஜோடிகள். பெண் குயில் தான் வைக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை ஈடு செய்ய, காகத்தின் முட்டையைக் கீழே தள்ளிவிடும். அந்த அளவுக்குப் பெண் குயில்கள் சிந்தனைகளிலும் திட்டமிடுவதிலும் கைதேர்ந்தவை. காகத்தின் கூடு கிடைக்காத நேரங்களில் சிறு பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டு விடுகின்றன. குயிலின் முட்டையும், குஞ்சும் காகம் போல் இருப்பதால் காகத்துக்கு வித்தியாசம் தெரியாது. காகமும் ஒரு வயது வரை தன் குஞ்சு போல் வளர்க்கும்.
காகம் தன் கூட்டில் அடைகாக்கப்படுவது குயிலின் குஞ்சுகளும்தான் என்பது தெரியாமல் அவற்றுக்கும் இரை கொடுக்கின்றன. குயில் குஞ்சுகளும் தன் பெற்றோர்க்குச் சளைத்ததில்லை. நன்கு வளர்ந்த குயில் குஞ்சுகள் காகங்களிடம் இருந்து உணவைப் பெற காகத்தின் குஞ்சுகளைப் போலவே கத்தி இரையைப் பெற்றுக் கொள்கின்றன. பறக்கும் திறனை அடைந்ததும், தனது சொந்தக் குரலால் கூவித் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பிறந்த இடத்தை விட்டு வெளியேறிவிடும். இது சுமார் 36 செ.மீ முதல் 46 செ.மீ அளவு வரை இருக்கும். பழங்களும் சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டங்கள் அதிகமாக உள்ள இடங்களுக்குக் குயில்களின் வருகை இருக்கும்.
கிராமப்புறங்களில் ஆண் குயிலை கருங்குயில் என்றும், பெண் குயிலை முத்துக் குயில் என்றும் அழைப்பது உண்டு. ஆண் குயில் காகத்தோடு அடிக்கடி சண்டையிடும். நீங்கள் வாழும் பகுதியைச் சுற்றித் திரியும் குயில்கள் தென்பட்டால் அதைத் தவறாமல் கவனியுங்கள். ஒரு நாள் நீங்களும் அவற்றின் சண்டையைக் காணலாம். அதோடு இணையோடு சுற்றும் காதலர் குயில்களைக் கண்டு ரசிக்கவும் வாய்ப்புகள் அமையலாம்.