`20 மணி நேர தூக்கம்; நடு இரவில் மட்டுமே உணவு!’

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ளது ரிவர்சைடு என்ற நகரம். இங்கு டேவிட் ஆலென் டுர்பின் (57) லூயிஸ் அன்னா டுர்பின் (50) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 13 குழந்தைகள். கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் வரை தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றை டேவிட் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருவார். அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வருடம் அவர்களின் 13 குழந்தைகளில் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறி வந்து தன் பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து அந்த வீட்டுக்குச் சென்ற காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வீடு மிகவும் அசுத்தமாக, வாழ்வதற்கு ஏற்ற இடமாக இல்லாமல் இருந்துள்ளது. மேலும், உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பல சிறைச்சாலைகளும் இருந்துள்ளன. பின்னர் குழந்தைகளைக் கொடுமை செய்த பெற்றோரைக் கைது செய்துள்ளனர்.

அந்த வீட்டில் நடந்தது பற்றிக் கூறிய 17 வயது சிறுமி, ` என் வீட்டில் என்னுடன் சேர்த்து மொத்தம் 13 பேர். 29 வயதிலிருந்து 2 வயது வரை எனக்குச் சகோதர சகோதரிகள் உள்ளனர். என் தாயும் தந்தையும் எங்களை அதிகமாகக் கொடுமைபடுத்துவார்கள். தினமும் 20 மணிநேரம் கட்டாயம் உறங்க வேண்டும். நடு இரவில் அவர்கள் எழுப்பும்போது எழுந்து மதிய உணவையும், இரவு உணவையும் சேர்த்து உண்ண வேண்டும். நாங்கள் எதாவது பேசினாலோ கேட்டாலோ எங்களைச் சிறையில் அடைத்துவிடுவார்கள். என் சகோதரிகளை வீட்டில் உள்ள கட்டிலில் சங்கிலியால் கட்டிவைத்து அதிகமாகக் கொடுமை செய்வார்கள். கழிவறை செல்ல வேண்டும் என்று கூறினாலும் திறந்துவிடாமல் இன்னும் அடிப்பார்கள். தினமும் காலை எழுந்தவுடனேயே அவர்கள் வலி தாங்கமுடியாமல் அழுவார்கள்.

மாதம் ஒரு முறைதான் குளிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். உடுத்த உடை தரமாட்டார்கள். நாங்கள் வெளியில் எங்கும் சென்றது கிடையாது. யாரையும் எங்களுக்குத் தெரியாது. கை கழுவும்போது சற்று தண்ணீர் அதிகமானால் எங்களைச் சங்கிலியால் பூட்டிவைத்துவிடுவார்கள். வீட்டில் அதிக கொடுமையை அனுபவித்தோம். இதிலிருந்து வெளியே வர நினைத்து நான் மட்டும் வீட்டின் ஜன்னல் வழியாகக் குதித்து வந்துவிட்டேன். பிறகு வெளியில் எனக்குக் கிடைத்த போன் மூலம் காவலர்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

இவரையடுத்துப் பேசிய ரிவர்சைடு காவல்துறையினர், ‘ 17 வயது சிறுமிதான் எங்களுக்கு தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கூறினார். தன் வீட்டு முகவரியைச் சரியாக சொல்வதற்குக் கூட அவர் மிகவும் சிரமப்பட்டார். பிறகு நாங்கள் வீட்டில் சென்று பார்க்கும்போது மிகவும் கொடூரமாக இருந்தது. குழந்தைகள் அனைவரும் அழுக்கு உடையுடன், உணவு இல்லாமல் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டனர். பெற்ற பிள்ளைகளையே அவர்களின் பெற்றோர் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதிக குழந்தைகள் பெற்றதால் தங்களின் வறுமை காரணமாகவே பெற்றோர் இப்படி நடந்துகொண்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடவுள்தான் அதிக குழந்தைகளைப் பெற்று வாழ்ந்தால் நன்றாக வாழமுடியும் எனக் கனவில் வந்து தெரிவித்ததாக கூறுகிறார்கள். தங்களின் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஒருவருடமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது. நேற்று நடந்த இறுதி விசாரணையில் நீதிபதிகள் முன்பு பெற்றோர் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். குழந்தைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் தற்போது காப்பகத்தில் வளர்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து குழந்தைகளைக் கொடுமைப்படுத்திய அந்த வீடு ’ஹாரர் இல்லம்’ என்றே அழைக்கப்படுகிறது.