நடிகர் உதயநிதி ஸ்டாலின்
நடிகை தமன்னா
இயக்குனர் சீனு ராமசாமி
இசை யுவன் ஷங்கர் ராஜா
ஓளிப்பதிவு ஜலேந்தர் வாசன்
நடிகை தமன்னா
இயக்குனர் சீனு ராமசாமி
இசை யுவன் ஷங்கர் ராஜா
ஓளிப்பதிவு ஜலேந்தர் வாசன்
அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசியின் வளர்ப்பில் வளரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பேச்சை தட்டுவதில்லை. விவசாயம் செய்வதற்கான படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்யும் முனைப்பில் இருக்கிறார்.
அதேபோல் கஷ்டப்படும் தனது ஊர் மக்களுக்கு வங்கியில் கடன் பெற்றுத் தந்து, அவர்களால் அதை அடைக்க முடியாவிட்டால் தானே முன்வந்து அதனை அடைக்கிறார். இந்த நிலையில், அந்த ஊரிருக்கு வங்கி அதிகாரியாக வரும் தமன்னா, ஒரே நபர் ஊரில் உள்ள பலருக்கும் கடன் வாங்கி கொடுத்திருப்பதை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இது கோபத்தை உண்டுபண்ண, உதயநிதி தமன்னா இடையே சிறிய மோதல் ஏற்படுகிறது. பிறகு இவர்களுக்கிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. பின்னர் தங்களது விருப்பத்தை வீட்டில் தெரிவிக்கின்றனர். வடிவுக்கரசிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் போக, இருவரையும் சந்திக்கவோ, பேசவோ விடாதபடி செய்கிறார்.
கடைசியில், உதயநிதி – தமன்னாவின் காதல் என்னவானது? இருவரும் இணைந்தார்களா? இவர்களது திருமணத்திற்கு வடிவுக்கரசி சம்மதித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விவசாயியாக வரும் உதயநிதி படம் முழுக்க கமலக்கண்ணன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் தனது மவுனத்தின் மூலமே தனக்கு உண்டான வலியை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். விவசாயிகள் கடன், நீட் பற்றி தைரியமாக பேசியிருக்கிறார். நிமிர் படத்திற்கு பிறகு உதயநிதியிக்கு முக்கிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது குடும்பத்தை வழிநடத்தும் தைரியமான பெண்ணாக தமன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். பண்பானவராக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் தமன்னாவுக்கு பாராட்டுக்கள்.
கோபம், காமெடி என வடிவுக்கரசி வித்தியாசமான பாட்டி வேடத்தில் வந்து கவர்ந்து செல்கிறார். பூ ராமுவுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், பார்வையாலேயே நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். சில வசனங்களே பேசினாலும் அதில் பொதிந்து இருக்கும் உண்மைகள் நிதர்சனமானவை என்பதை உணர்த்திச் செல்கிறார். மற்றபடி வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன், ஷாஜி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப போதுமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வடிவுக்கரசிக்கு தகவல் கொடுக்கும் கதாபாத்திரமும் கவரும்படியாக இருக்கிறது.
ஒரு சாதாரண கதையில் பாசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சீனு ராமசாமி. கண்ணுக்குள் புதைந்திருக்கும் ஈரத்தை தன்னுடைய காட்சிகள் மூலம் கண்ணீராக வரவைப்பதில் சீனு ராமசாமி கைதேர்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது பாதியில் சென்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஈர்த்துவிடுகிறார். கதாபாத்திரங்களிடம் எதார்த்தமான நடிப்பை வரவைப்பதில் சீனு ராமசாமி வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். மூ. காசி விஸ்வநாதனின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
விவசாயிகளின் வலி, நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் மண் சார்ந்த கதையை உருவாக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள். மிகைப்படுத்தாத வசனங்கள் இயல்பானதாக படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.