இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: இம்ரான்கான்

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டு உள்ளார்.

கா‌ஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்‌ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார். இந்தியா போர் தொடுத்தால் தாக்குதலுக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தானும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் நேற்று கூட்டினார். கூட்டத்தில் ராணுவ தளபதி காமர் ஜாவத் பஜ்வா, துணை தளபதிகள், உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், நிதித்துறை, ராணுவத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் போது, நாட்டின் பாதுகாப்பு அம்சம், போர் வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவ் வழக்கை சர்வதேச கோர்ட்டில் எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்தனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாகிஸ்தான் மக்களை பாதுகாக்கும் வலிமையும் திறனும் பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். நடந்த சம்பவம் (புலவாமா தாக்குதல்) பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இந்தியாவிடம் இருந்து ஆக்கபூர்வமான பதில் வரும் என்று நம்புகிறோம்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாராவது பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதாக இந்திய அரசு தக்க ஆதாரங்களை கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது விபரீதமாகவோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.