ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு போதும் வெற்றிபெற முடியாது எனக் கூறியுள்ளார்.
ஆட்கடத்தல்காரர்களை குறிவைத்து 15 நாட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தஞ்சக்கோரிக்கையாளர்கள் அதிகமாக வெளியேறும் நாடுகளாக உள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இடைப்பட்ட நாடுகளாக உள்ள இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து இக் காணொளி பரப்பப்படுகின்றது.
அந்த எச்சரிக்கை காணொளி யில்,“சட்டவிரோதமான படகு பயணத்தை மேற்கொள்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து பயணத்தை தொடங்கிய நாட்டுக்கோ அல்லது சொந்த நாட்டுக்கோ நாடுகடத்துவார்கள்” என ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு நேரடி எச்சரிக்கை காணொளி யை ஆஸ்திரேலிய பிரதமர் வெளியிடுவது இதுவே முதல்முறை எனப்படுகின்றது.
மனுஸ்தீவு மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்களை மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வது தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இம்மசோதாவுக்கு ஆளும் மாரிசன் அரசு எதிர்ப்பு தெரிவித்த போதும் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இம்மசோதா நிறைவேறியது.
இந்த நிலையிலேயே இப்படியொரு எச்சரிக்கை காணொளியை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வெளியிட்டிருக்கிறார். அத்துடன், அண்மையில் கிறிஸ்துமஸ் தீவில் மூடப்பட்ட தடுப்பு முகாமையும் மீண்டும் திறப்பதாக ஆஸ்திரேலியாவை ஆளும் லிபரல் அரசு அறிவித்திருக்கின்றது.
Eelamurasu Australia Online News Portal