மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை!

இறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனைக் கூறுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இறுதிப்போரில் இடம்பெற்ற அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் எனக் கூறியுள்ளார்.

அதற்கு ஒத்து ஊதும் விதமாக சுமந்திரன், போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் குற்றங்களைப் புரிந்துள்ளார்கள் என்றும், மன்னித்து மறப்பதற்கு தயாராகவேண்டும் எனவும் கூறுகிறார்.

இதனைச் சொல்வதற்கு சுமந்திரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. மேலும் சுமந்திரன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய நீதிக்கான எதிர்பார்ப்பை அடியோடு நிராகரிப்பது மட்டுமல்லாமல், அதை மலினப்படுத்தும் செயற்பாட்டை அப்பட்டமாக செய்துகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரச படைகள் செய்த குற்றங்களுக்கு ஒப்பான குற்றங்களைச் செய்தார்களா? அதற்குமேல் யுத்தத்தின் இறுதியில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளைக் காணவில்லை. அல்லது அவா்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள். மிகுதியானவர்கள் புனர்வாழ்வு என்ற பெயாில் மோசமான சித்திரவதைகளைத் தாண்டி வந்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் குற்றஞ்செய்யாதவர்கள் தண்டனை பெற்று வந்துள்ளனர். குற்றஞ் செய்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

உண்மையான குற்றவாளிகளுக்கும், அவர்களுடைய குற்றங்களுக்கும் பிரதமர் ரணில் மட்டுமல்லாது, சுமந்திரனும் வெள்ளையடிக்கப் பார்க்கிறார்.

ஆகவே மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனைக் கூறுவதற்கு பிரதமர் ரணிலுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கோ எந்த அருகதையும் கிடையாது” என்று குறிப்பிட்டார்.