திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் தன்னை காவல் துறையினர் சித்திர
வதைக்கு உள்ளாக்கினர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுத் தெரிவித்தார்.
கொக்குவிலில் உள்ள வீடொன்றை உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கின் சாட்சியாக முறைப்பாட்டைப் பதிவு செய்த மற்றும் சந்தேகநபர்களைக் கைது செய்ய உதவிய பொலிஸ் உத்தியோகத்தரிடம் சாட்சியம் பெறப்பட்டது.
அதன்பின்னர் சாட்சியத்தில் குறுக்கு விசாரணைகள் உள்ளனவா? என்று சந்தேகநபர்களிடம் மன்று வினவிய அப்போது இரண்டாவது சந்தேகநபர் தன்னை காவல் துறையினர் சித்திரவதை செய்தார்கள் என்று தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்த காவல் துறை கொக்குவிலில் உள்ள இந்து மயானத்தில் வைத்து “பைப்” ஒன்றால் தாக்கிச் சித்திரவதை செய்தனர். அதன்பின்னரேகாவல் துறை நிலையம் அழைத்துச் சென்றனர். அங்குகாவல் துறையினரும், முறைப்பாட்டாளரும் கூடி நின்று எம்மை அடையாளம் காட்டினர் என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறான சித்திரவதை இடம்பெற்றதா? என்று வழக்கில் சாட்சியம் அளித்தகாவல் துறை உத்தியோகத்திரிடம் மன்று வினவிய போது அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று காவல் துறை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அதன்பின்னர் வழக்கு தொடர் விளக்கத்துக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.