தமிழ் ஆளுமைகளைக் கொண்டாடுவோம்!

‘தமிழ் திரு’ வாழ்நாள் சாதனையாளர் விருது:

கோவை ஞானி

கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய கோவை ஞானி மார்க்ஸிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுவருகிறார். தமிழ் மரபையும் மார்க்ஸியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்ஸியத்தைப் படைத்துள்ளார். ‘புதிய தலைமுறை’, ‘வானம்பாடி’, ‘மார்க்சிய ஆய்விதழ்’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’, ‘தமிழ் நேயம்’ என்று தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். கோவை வட்டாரத்தில் சிறந்த தமிழ் அமைப்புகளை உருவாக்கியதோடு சிறந்த ஆய்வாளர்களை, கட்டுரையாளர்களை, படைப்பாளிகளையும் உருவாக்கினார். கடந்த 40 ஆண்டுகளில் 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளவர். இந்திய நாகரிகம் என்பதன் மாபெரும் தொகுப்பில் தமிழர் நாகரிகத்தின் பங்களிப்பு பெரிது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோவை ஞானி, தமிழின் சமகால அறிவுலகை வடிவமைத்த முன்னோடிகளில் ஒருவர்.

சமகால இலக்கியச் சாதனையாளர் விருதுகள்

விக்ரமாதித்யன்

கவிதையையே முழு வாழ்வாகக் கொண்டு நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருபவர் கவிஞர் விக்ரமாதித்யன். பாரதியார் நூற்றாண்டையொட்டி வெளிவந்த ‘ஆகாசம் நீல நிறம்’ கவிதைத் தொகுப்பின் வாயிலாகத் தமிழ்க் கவிதை உலகில் தனது தடத்தைப் பதிக்கத் தொடங்கியவர் விக்ரமாதித்யன். சாமானியனின் காதல், பிரிவு, ஏக்கம், இல்லாமை, நம்பிக்கை, அவநம்பிக்கை, புராணிகங்களைக் கவிதைகளாக்கியுள்ள விக்ரமாதித்யன் 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரை நூல்களையும் சுய வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியவர். தமிழ் பாணர் மரபின் கடைசிக் கண்ணியாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் விக்ரமாதித்யன் இலக்கிய நண்பர்களையும் இளம் கவிஞர்களையும் வாசகர்களையும் தமிழகம் முழுக்கத் தேடித் தேடி இந்த வயதிலும் பயணித்துக்கொண்டிருப்பவர்.

பா.வெங்கடேசன்

2002-ல் வெளியான ‘ராஜன் மகள்’ நெடுங்கதைத் தொகுப்பிலிருந்து யதார்த்தத்தின் மாயக் கதைசொல்லியாக பா.வெங்கடேசன் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். இவரது ‘தாண்டவராயன் கதை’ (2008) நாவலை ‘நோபல் பரிசு பெறத்தக்க தமிழ் நாவல்’ என்று விமர்சகர் ராஜன் குறை பாராட்டியுள்ளார். 2016-ல் வெளியான ‘பாகீரதியின் மதியம்’ நாவல் அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஒரே பத்தியில் அமைந்த இவரது ‘வாராணசி’ நாவல் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதுவரை மூன்று நாவல்கள், ஒரு நெடுங்கதைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று பா.வெங்கடேசன் தமிழுக்குச் சேர்த்திருக்கும் வளம் அளப்பரியது.

கோவை அவினாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியில் பிப்.17 அன்று காலை 9.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது ‘யாதும் தமிழே’.

இலக்கியம் இக்கணம்

காலை 10.30 மணிக்குத் தொடங்கும் முதல் அமர்வு சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றியது. இந்த அமர்வில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், கவிஞர் க.ஆனந்த், திரை விமர்சகர் ஜா.தீபா, கவிஞர் சபரிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

வல்லினம் மெல்லினம் இடையினம் மென்பொருளினம்

காலை 11.30 மணிக்கு ‘சமூக ஊடகங்களும் நானும்’ என்ற தலைப்பில் பேசுகிறார், சிறப்பு விருந்தினரான இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன். ‘சமூக ஊடகங்களில் தமிழின் நிகழ்காலமும் உரையாடல்களின் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் விவாதிக்கிறார்கள் பேராசிரியர் ராஜன் குறை, எழுத்தாளர் அராத்து, பேராசிரியர் நவீனா, எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.

திருமணம் – சில திருத்தங்கள்

மதியம் 1.00 மணிக்கு சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்கள்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்படுகிறது. படக்குழுவின் சார்பாக நடிகர் தம்பி ராமையா பங்கேற்கிறார்.

சிம்மக் குரலும் திரைத் தமிழும்

பிற்பகல் 2 மணிக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கொண்டாடும் அமர்வு. நடிகர் சிவகுமார், பத்திரிகையாளர் டி.ஏ.நரசிம்மன், ராம்குமார் கணேசன் பங்கேற்கிறார்கள்.

கேள்வி நீங்கள்… பதில் சமஸ்

மாலை 4.30 மணிக்கு வாசகர்களின் சூடான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் ‘இந்து தமிழ் திசை’நடுப்பக்க ஆசிரியர் சமஸ்.

தமிழ் உணவு கல்வி அரசியல்

மாலை 5.00 மணிக்கு தமிழின் வெவ்வேறு பரிமாணங்களையும் அலசும் மூன்று குறு அமர்வுகளில் சமஸ், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் பக்தவத்சல பாரதி, கல்விச் செயல்பாட்டாளர் பிரபா கல்விமணி, கல்விச் செயல்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா, மொழியுரிமைச் செயல்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

விருதுகள் போற்றுவோம்

மாலை 6.30 மணிக்கு,தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகன் ‘விருதுகள் போற்றுவோம்’ என்ற தலைப்பில் விருதுகள், அங்கீகாரங்கள் குறித்து உரையாற்றுகிறார்.

தமிழுக்கு மரியாதை

தமிழின் சமகால முக்கிய ஆளுமைகளான கோவை ஞானி, விக்ரமாதித்யன், பா.வெங்கடேசன் ஆகிய மூவருக்கும் ‘தமிழ் திரு’ விருது வழங்கப்படுகிறது. தமிழ் ஆளுமைகளைக் கொண்டாடுவோம் வாருங்கள்!