நாம் புலிகளாக இருந்தோம்! – இயக்குநர் செழியன்

இது உலக சினிமாக்களை வியந்து கொண்டாடும் தலைமுறை யின் காலம். இப்போது தமிழ் சினிமா ஒன்றை உலகமே உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர் செழியனின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டுலெட்’. உலக அளவில் 100 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 84-ல் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட படம்.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது உட்பட, மொத்தம் 32 சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் முதல் தமிழ் சினிமா. உலகம் சுற்றித் திரும்பியிருக்கும் ‘டுலெட்’ பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநர் செழியனைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

‘டுலெட்’ படத்தின் போஸ்டரில் இருக்கும் மூன்று பாதச்சுவடுகளின் கதையைக் கூறுங்கள்?

முகங்களே இல்லாமல் எளிமையாக ஒரு போஸ்டர் இருக்க வேண்டும். அதைப் பார்த்ததுமே படத்தின் கதை புரிய வேண்டும். இதுதான் விருப்பம். எனக்குப் பிடித்த ஓவியர் சந்தோஷ் நாராயணனிடம் பேசினேன். ஒரு குடும்பம் வீடுதேடி அலைகிறது இதுதான் கதை என்று சொல்லி படத்தின் ஒரு காட்சியை மட்டும் காட்டினேன். அலைச்சலைக் குறிக்க ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு குழந்தை மூவரின் பாதச்சுவடுகள். அதற்கு நடுவில் ஒரு வீடு என்று வரைந்துகொடுத்தார்.

மூன்றாவது படிக்கிற என் மகள் அதிதாவை ‘டுலெட்’ என்று எழுதச் சொல்லி பாதச் சுவடுகளுடன் இணைத்தோம். அவ்வளவுதான். இந்த மூன்று பாதங்களும் உலகத்தையே சுற்றி வந்துவிட்டன.

சர்வதேச அளவில் இத்தனை விருதுகளைக் குவித்திருப்பதன் மூலம், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் ‘டுலெட்’ திரைப்படம் கூறும் செய்தி என்ன?

நம்பிக்கைதான்.  ஒரு சினிமாவை உலகம் போற்றுவதற்குப் பிரம்மாண்டம், பிரபலங்கள் தேவையில்லை. உண்மை மட்டுமேபோதும் என்பதுதான்.  நாம் உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கிறோம். நம் சினிமாவைப் பார்த்தும் உலகம் வியக்கும் என்பதுதான். ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என்று காந்தி சொன்னது போல  உலகம் நம்மைக் கவனிக்க எளிமையான கதையும் நேர்மையான அணுகுமுறையும் போதும். இதுதான் ‘டுலெட்’ சொல்லும் செய்தி.

 

கார்த்தி, ஆர்யா, சித்தார்த், சசிகுமார் என்று  பிரபலக் கதாநாயகர்கள்  ‘டுலெட்’ படத்தைப் பற்றிப் பாராட்டி ட்வீட் செய்கிறார்கள். ஆனால், அவர்களைப் போன்றவர்கள், இதுபோன்ற முயற்சிகளில் பங்கேற்க வருவதில்லையே?

குடும்பத்துக்குள் ஒரு  சகோதரன்  பரிசு வாங்குகிறான் என்றால் மற்ற சகோதரர்கள் பாராட்டுவதுதான் மரபு. அந்த அன்பையும் பண்பையும் நான் பெரிதும் மதிக்கிறேன்.

வணிக சினிமாவில் இப்படி ஒரு முயற்சியை வெற்றிகரமாகச் செய்து காட்டும்போதுதான் எல்லோரும் அதைச் செய்துபார்க்க முன்வருவார்கள். ‘டுலெட்’ வெளியாகிறது என்று தெரிந்தவுடன் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்டர்களை  வரைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சுவரொட்டி இயக்கமாக மாறிவிட்டது. உலகில் எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இது.

இந்தக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக  நல்ல படங்கள் வரலாம். அப்போது நம் பிரபலங்கள் அதில் நிச்சயம் பங்கேற்பார்கள்.  அந்த வகையில் ‘டுலெட்’ ஒரு புதிய சினிமாவின் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அதிக விருதுகளைப் பெற்ற படம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே வரும்போது, அவர்களுக்கான திரை அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்?

படத்துடன் முழுமையாக உங்களை இணைத்துக்கொள்ள முடியும். வீடு தேடுவது மட்டுமே கதையல்ல. அந்த வீட்டுக்குள் இருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு குழந்தைக்குமான அன்பும் கோபமும் ஏக்கமும் நம்பிக்கையும்தான் கதை.

விருதுகள் வாங்கிய படம் என்றால் டாகுமெண்டரி மாதிரி இருக்கும் என்று ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. அது பழைய நம்பிக்கை. ஓஷோவைப் பற்றி ஒரு டாகுமெண்டரி பார்த்தேன். ஹாலிவுட் திரில்லர் படத்தை விடவும் சுவாரசியமாக இருக்கிறது. எனவே, எந்த விஷயத்தைத் திரைப்படமாக எடுத்தாலும் அது சுவாரசியமாக இருக்க வேண்டும். பணம் கொடுத்துப் படம் பார்க்க வருகிற பார்வையாளரின் நேரத்தை மதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சுவாரசியம் என்றாலே பாடல்களும் சண்டைகளும் மட்டும்தானா? குடும்பத்துக்குள் அதைவிட அதிக சுவாரசியம் இருக்கிறதே. வேலை முடிந்து உங்கள் வீட்டுக்குத் திரும்புகிற மனநிலையில் தியேட்டருக்கு வாருங்கள். திருமணமானவர் என்றால் கட்டாயம் உங்கள் மனைவி குழந்தைகளுடன் வாருங்கள். ஒரு புது திரைப்பட அனுபவம் காத்திருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் ‘டுலெட்’ போன்ற படங்கள் அதிகரிக்கப் படைப்பாளிகளும் பார்வையாளர்களும் என்ன செய்ய வேண்டும்?

தாய்லாந்தில் ஒரு கோயிலில் மனிதர்கள் நடமாடுகிற இடத்தில் புலிகள் சாதுவாகப் படுத்திருக்கிற வீடியோ ஒன்றைப் பார்த்தேன். வளர்க்கப்பட்ட விதத்தில் அவை புலிகளின் குணத்தையே மறந்து விட்டன. அதுபோல இலக்கியத்தில், கலைகளில் நம் முன்னோர்கள் புலிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் எந்தக் குணமும் இல்லாமல் திரைப்பட ரசனையில் நாம் மிகவும் மேலோட்டமாக இருக்கிறோம். அதற்குப் பார்வையாளர்கள் காரணம் அல்ல. படைப்பாளிகள்தாம் காரணம். நல்ல திரைப்படங்களைத் தொடர்ந்து கொடுக்கும்போது பார்வையாளர்கள் அந்த ரசனைக்குப் பழகுவார்கள்.