அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையில் கடந்த வருடம் நான்காயிரத்து 807 பேர் அனைத்து வினாக்களுக்கும் தவறாக பதிலளித்து தோல்வியடைந்துள்ளனர்.
உள்துறை அமைச்சினால் இந்த பரீட்சை நடத்தப்பட்டுவருகின்றது. குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களில் ஆயிரத்து 200 பேர் மூன்று தடவைகளுக்கு மேல் இந்த பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களம் மற்றும் உள்துறை அமைச்சின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்டுவரும் பரீட்சை எவ்வளவு சிக்கலானது என்பது இந்த முடிவுகளின் மூலம் தெளிவாகிறது.
மேற்படி தரவுகளை மேற்கோள்காண்பித்து ஊடகங்கள் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
கடந்த ஆண்டு குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்த 85 ஆயிரத்து 267 பேரில் நான்காயிரத்து 807 பேர் 20 கேள்விகளிலும் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
இவர்கள் மறுபடியும் இந்த பரீட்சைக்கு தோற்றமுடியும் என்றாலும் இந்த பரீட்சை முறை புதிய குடிவரவாளர்களுக்கான மிகப்பெரிய சுமையாகத் தொடர்கிறது என்பதை மறுக்கமுடியாது என்று ஊடகங்கள் விமர்சித்திருக்கின்றன.
இந்த இழுபறிகளின் தொடர்ச்சியாக கடந்த நான்கு வருடங்களில், குடியுரிமைக்காக காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை 771 வீதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.