ஆப்கானிடம் படித்த பாடங்கள்!

ஒரு இராணுவத்தின் எச்சமிச்சம் ;  வரலாற்றில் இடம்பெற்ற இராணுவ மோதல்களின் காட்சிகளை தத்ரூபமாக வரைவதில் புகழ்பெற்ற 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் பெண் ஓவியர்  எலிசபெத் பட்லர் வரைந்த மெழுகுச்சேலை ஓவியம் முதலாவது இங்கிலாந்து – ஆப்கான் போரின் (1839 — 1842 ) நீடித்து நிலைக்கும்  காட்சித்தோற்றமாக விளங்குகிறது. அது பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு மருத்துவ அதிகாரியான வில்லியம் பிரைடன் 1842 ஆம் ஆண்டில் காபூலில் இருந்து ஜலலாபாத் வந்துசேருவதைச் சித்திரிக்கிறது. காயமடைந்த பிரைடனுடன் அவரது குதிரையும் களைத்துச் சோர்ந்துபோய்விட்டது. பிரிட்டனின் ஆப்கான் படையெடுப்பு கோணலாகிப்போனதையடுத்து காபூலில் இருந்து பின்வாங்கிக்கொண்டிருந்த 16 ஆயிரம் படைவீரர்கள் மற்றும் படைமுகாம் பணியாளர்களில் பிரைடன் மாத்திரமே உயிர்தப்பிவந்துசேர்ந்தார்.

 

137 வருடங்களுக்குப் பிறகு சோவியத் யூனியன் அதற்கு சார்பான கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்குத் துருப்புக்களை அனுப்பியது. ஒரு தசாப்தகாலத்துக்குப் பிறகு அவமானத்துடன் சோவியத் துருப்புகளும் வாபஸ்பெற்றுக்கொண்டன. மீண்டும் 2001 ஆம் ஆண்டில், சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலலகில் ஒரே வல்லரசாக விளங்கிய அமெரிக்கா  பயங்கரவாதம் மீதான அதன் போரைத்தொடுக்க ஆப்பகானிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்பியது. இப்போது 17 வருடகாலப் போருக்குப் பிறகு, மானத்தைக் காப்பாற்றிக்கொண்டு அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு வழிசெய்யக்கூடிய சமாதானத் திட்டவரைவு ஒன்றுக்கு அமெரிக்காவும் தலிபான்களும் ‘ கொள்கையளவில்’ இணங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதில் வரலாற்றின் எதிரொலிகள் கேட்கின்றன.எவர் காதுக்கும் அவை எட்டாதிருக்கமுடியாது.

ஆப்கானிஸ்தான் வரலாற்றுரீதியாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடினமான ஒரு இடமாகவே இருந்துவந்திருக்கிறது. அதற்குக் காரணம் சிக்கலான பழங்குடி இனமரபுக்குழுச் சூழலும் கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பிராந்தியமுமே. புவியியலினால் பூகோள அரசியல் விதி தீர்மானிக்க்கப்படுகின்ற நாட்டுக்கு ஆப்கானிஸ்தான் செம்மையான உதாரணமாகும்.

19ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானையும் மத்திய மற்றும் தெற்காசியாவையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு பிரிட்டிஷ் சாம்ராச்சியத்துக்கும் ரஷ்ய சாம்ராச்சியத்துக்கும் இடையில் இடம்பெற்ற அரசியல் மற்றும் இராஜதந்திர மோதலின் ( ) ஒரு அங்கமாக 1839 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சாம்ராச்சியம் ஆப்கானிஸதானுக்கு துருப்புக்களை அனுப்பியது. ரஷ்யர்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இந்தியாவின் எல்லைக்கு வந்துவிடுவார்கள் என்று பிரிட்டன் அஞ்சியது. பிரிட்டிஷின் கிரீடத்தில் இருந்த ஆபரணம் என்று வர்ணிக்கப்பட்ட இந்தியாவின் எல்லைக்கு ரஷ்யர்கள் வருவதை முன்கூட்டியே தடுக்கும் தந்திரோபாயமாக அவர்கள் காபூலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் மன்னரான டொஸ்த் முஹம்மத் கானை பதவிகவிழ்த்துவிட்டு தங்களது கையாளான ஷா சுஜா துராணியை அதிகாரத்தில் அமர்த்தினார்கள்.

பழங்குடி இனக்குழுக்களின் போராளிகளின் வன்முறைப் போராட்டத்தையடுத்து ஆக்கிரமிப்பு தாக்குப்பிடிக்க முடியாததாகியது.குறிப்பாக டொஸ்த் முஹம்மத்தின் மகன் அக்பர் கானின்  தலைமையிலான பிரிவினர் பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும் சவாலாக அமைந்தனர். அதனால் அவர்கள் வாபஸ்பெறத் தீர்மானித்தார்கள்.ஆனால், வாபஸாகும்போது பிரைடனைத்தவிர அவர்களின் சகல துருப்புக்கும் படுகொலை செய்யப்பட்டன. இறுதியில் டொஸ்த் முஹம்மத் காபூலை மீளக்கைப்பற்றினார்.

சோவியத்யூனியனும் அதே தவறைச்செய்தது. 1978 கம்யூனிஸ்ட் சதிப்புரட்சியின் தலைவர் நூர் முஹம்மத் தராக்கியைக் கொலைசெய்தபிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஹஃபிசுல்லா அமீன்  குறித்து சோவியத்காரர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருந்தனர். 1979 டிசம்பரில் சோவியத் தலைவர் லியோனிட் பிரஷ்னேவ் ஆப்கானிஸதானுக்கு துருப்புக்களை அனுப்பினார்.சோவியத்காரர்கள் இன்னொரு சதிப்புரட்சியை அரங்கேற்றினார்கள். அமீன் அதில் கொல்லப்பட்டதையடுத்து மாஸ்கோவின் விசுவாசியான பாப்ரக் கர்மால் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தப்பட்டார்.

வியட்நாம் போரில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் 1979 இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து ஈரானில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்து அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் தலையீடு தங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாக நினைத்தார்கள்.கம்யூனிஸ்ட் அரசாங்கத்தையும் அதை ஆதரிக்கும் சோவியத் படைகளையும் எதிர்த்துப்போராடிய பழங்குடி குலமரபுக்குழுப் போராளிகளான முஜாஹிதீன்களை பாகிஸ்தானினதும் சவூதி அரேபியாவினதும் உதவியுடன் அமெரிக்கா ஆதரித்தது. அந்த நேரத்தில் முஸ்லிம் உலகில் கம்யூனிசம் விரிவடைவது குறித்து சவூதி  கவலையடைந்திருந்தது. ஒரு தசாப்தம் கழித்து ஆக்கிரமிப்பு தாக்குப் பிடிக்கமுடியாதது என்பதை விளங்கிக்கொண்ட சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புக்களை விலக்கிக்கொண்டது.

2001 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியைத்  தாக்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்தபோது ‘ பயங்கரவாதம் மீதான போர் ‘ உலகளாவிய அளவில் செயற்படுகின்ற ஒவ்வொரு பயங்கரவாதக்குழுவும் கண்டுபிடிக்கப்பட்டு, தடுத்துநிறுத்தப்பட்டு, தோற்கடிக்கப்படும்வரை முடிவுக்கு வராது என்று ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் கூறினார்.அது மிகவும் கஷ்டமான ஒரு இலக்கு. தலிபான்களை அமெரிக்கா விரைவாகவே கவிழ்த்து.இறுதியில்  ஜனாதிபதி ஹமிட் கர்சாயின் கீழ் அப்கானிஸ்தான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தது.

ஆனால், 17 வருடகால சண்டைகளுக்குப் பிறகு போர் எங்குமே சென்றடைந்ததாக இல்லை. போரில் உயிரிழந்தவர்களின் விபரங்களை ஐக்கிய நாடுகள் சபை ஆவணப்படுத்தத்தொடங்கிய 2009 ஆண்டுக்குப் பிறகு சுமார் 20 ஆயிரம்  ஆப்கான் குடிமக்கள் மோதல்களின்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு 50 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இந்தப் போரில்  சுமார் ் 877 பில்லியன் டொலர்களை செலவுசெய்திருக்கும் அமெரிக்கா போர் தொடங்கியதற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் குறைந்தபட்சம் 2000 இராணுவத்தினரை இழந்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் பிரதிபலனாக அமெரிக்கா எதைப் பெற்றுக்கொண்டது? 2001 ஆம் ஆண்டில் பின்வாங்கிச்சென்ற தலிபான்கள் திரும்பவும் வந்துகொண்டிருக்கிறார்கள்.அனேகமாக ஆப்கானிஸ்தானின் அரைவாசிப்பகுதி, பெரும்பாலும் மலைப்பிராந்தியங்கள் இப்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சிலர் மதிப்பிடுகிறார்கள். கிழக்குப்பகுதியில் மிகவும் ஆழமாக நிலைகொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு இயக்கத்தின் சிறிய குழுவினர் அண்மைய மாதங்களில் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.அவற்றின் விளைவாக ஹசரா ஷியா பிரிவைச் சேரந்த நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.அரசாங்கம் ஊழல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. காபூலுக்கு வெளியே பிராந்திய தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கத் துருப்புககளை நாட்டுக்கு  திருப்பியழைக்கப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப பல தடவைகள் தெளிவுபடக்கூறியிருக்கிறார். இருந்தாலும் அவர் 2017 ஆம் ஆண்டில் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு மேலும் கூடுதல் துருப்புக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்.அதற்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் பரந்தளவில் விமானக்குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியது. ஆனால் தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுக்கத் தவறிவிட்டது. ஆப்கானிஸ்தானின் கிராமப்புறங்களில் தொடர்ந்து  செல்வாக்கைச் செலுத்திக்கொண்டிருக்கும் தலிபான்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தாக்குதல்களை நடத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு சண்டைகளில்  ஆப்கானிஸ்தான் சுமார் 45 ஆயிரம் படைவீரர்களை இழந்திருக்கிறது. அதிகரிக்கும் இழப்புகள் மற்றும் முரண்நிலையில் காணப்படுகின்ற முட்டுக்கட்டை நிலையைத் தகர்ப்பதில் உள்ள இயலாமைக்கு மத்தியில், ( 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தையும் 20 ஆம் நூற்றாண்டில் சோவியத் யூனியனையும் போன்று) அமெரிக்கர்கள் 21 ஆம் நூற்றாண்டின் முதலாவது பெரிய போரில் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.

அடுத்தது என்ன என்பதே இப்போது முக்கியமான கேள்வி.ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கப்போவதில்லை என்று தலிபான்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றிருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. போர்நிறுத்தம் ஒன்றுக்கும் ஆப்கான் தரப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கும் அது தூண்டுதல் கொடுக்கவும் செய்யும்.ஆனால், தலிபான்களுக்கு ஏற்கெனவே அமெரிக்கா பெருமளவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது என்பதுதான் உண்மை.

ஆப்கான் நிருவாகத்துடன் பேசப்போவதில்லை என்று தலிபான்கள் கூறியிருக்கிறார்கள் ; அரசாங்கத்தின் சட்டபூர்வத்தனமையை தலிபான்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அமெரிக்கா பலம்பொருந்திய நிலையில் இருந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கும் தலிபான்களுடன் நேரடியாகப் பேசியிருக்கிறது. அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறவேண்டும் என்பதே தலிபான்களின் மிகப்பெரிய கோரிக்கை. அவர்களின் எதிர்காலப் பாத்ததிரம் குறித்து எந்தவொரு தெளிவான இணக்கப்பாடுமின்றி கொள்கையளவில் படைவிலகலுக்கும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்திருக்கிறது. படுமோசமாகத் தோல்விகண்டுகொண்டிருக்கும் போர் ஒன்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கு அமெரிக்கா எந்தளவுக்கு அவசரப்படுகிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது. பெருமளவுக்கு தலிபான்களின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து விலகப்போகின்றது.

அமெரிக்காவுடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காகத்தான் 17 வருடங்களாக தலிபான்கள் போரிட்டார்கள் என்று கூறுவது பத்தாம்பசலித்தனமானது. 2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை அடுத்து தாங்கள் இழந்த  அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காகவே அவர்கள்  போரிட்டார்கள். அமெரிக்கர்கள் வெளியேறியதும் தலிபான்கள் ஏதோ ஒரு வழியில் காபூலின் அதிகாரத்துக்கு சவாலைத்தோற்றுவிப்பார்கள் என்பது மாத்திரம் நிச்சயமானது.

( இந்து)