காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமதுதர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:-
ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டிபா இருக்கிறது. இவன் தந்தை பெயர் ரியாஷ் அகமது. சிறிய கடை ஒன்றை அங்கு நடத்தி வருகிறார்.
பிளஸ்-2 வரை படித்த ஆதில் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளான். அவ்வப்போது அருகே உள்ள மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளான். இவனது உறவினர் ஒருவர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆதிலுக்கும் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் மூளை சலவையில் கிறங்கிய அவன் கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனான். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளான். அவர்கள் ஆதிலை தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி கொடுத்து தயார் படுத்தி உள்ளனர்.
இவன் அந்த அமைப்பில் ‘சி’ பிரிவை சேர்ந்த தீவிரவாதி ஆவான். தாக்குதலுக்கு முன்பு ஆதில் அகமது தர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தான். “என்னை போல மேலும் பல இளைஞர்கள் இதே வழியில் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக” தெரிவித்துள்ளான்.
ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பு காஷ்மீர் இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களை தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகிறது.
2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்திகதி பர்தீன் அகமதுகான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலுக்கு ஈடுபடுத்தப்பட்டான். இவனை போல உள்ளூரை சேர்ந்த 3 பேரை அந்த தீவிரவாத அமைப்பு தற்கொலைக்கு பயன்படுத்தி உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.