தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை உள்ளது என மார்தட்டி கொண்டாலும், தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் விழிப்புணர்வு அல்லது அதனை நடைமுறைபடுத்தல் என்பது எவ்வளவு தூரத்தில் நிற்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் அரச அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான ஆணைக்குழு வடக்கில் உள்ள அரச அதிகாரிகளே தகவல் அறியும் உரிமைசட்டத்தினை மதித்து மக்களுக்கு தகவல்களை வழங்குவதில் திறமாக செயற்படுவதாக பாராட்டியுள்ளனர்.
தட்டிக்கழிக்கும் செயற்பாடு
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தமது வதிவிட மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்களின் விபரங்கள் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சிடம் கேட்கப்பட்ட தகவல்களை கல்வி அமைச்சு, மாகாண கல்வி திணைக்களத்திற்கு திருப்பி விட்டனர். மாகாண கல்வி திணைக்களம் அதனை வலயங்களுக்கு திருப்பி விட்டன.
வதிவிட மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்களின் விபரங்கள் வடமாகாண கல்வி அமைச்சிடமோ, மாகாண கல்வி திணைக்களத்திடமோ இல்லை என்பது புலனாகிறது. அல்லது அந்த தகவல்களை வழங்க கூடாது எனும் நோக்கில் காலத்தை இழுத்தடிப்பு செய்யும் எண்ணமாக கூட அது இருந்திருக்கலாம்.
வடமாகாண கல்வி அமைச்சிடம் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி கையளிக்கப்பட்டது. அதனை அவர்கள் கல்வி திணைக்களத்திற்கு அனுப்பி , கல்வி திணைக்களம் வலயத்திற்கு அனுப்பி தகவல்களை கோரிய போது 12 வலயங்களில் ஐந்து வலயங்களே அதற்கு பதில் அனுப்பின. அவற்றில் கிளிநொச்சி வலயம் மாத்திரமே கிளிநொச்சி வலயத்தில் வெளிமாவட்ட ஆசிரியர்கள் 1213 பேர் கற்பிப்பதாக தகவல் தந்துள்ளது. தென்மராட்சி வலயம் தமது வலயத்தில் வெளிமாவட்ட ஆசிரியர்கள் கற்பிக்க வில்லை எனவும் , வடமராட்சி வலயம் அந்த கேள்வி பொருத்தமில்லை எனவும் , துணுக்காய் கல்வி வலயம் அது தொடர்பில் பொருத்தமான தகவல்கள் இல்லை எனவும், தீவக கல்வி வலயம் வினாவில் தெளிவில்லை எனவும் பதிலளித்து உள்ளனர். ஏனைய ஏழு வலயங்களும் அது தொடர்பில் எந்த பதிலும் அளிக்க வில்லை.
தகவல்கள் கோரி 28 வேலை நாட்களுக்குள் தகவல் கோரியவருக்கு தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உள்ள போதும் 70 வேலை நாட்களுக்கு மேல் கடந்த நிலையிலும் கோரிய தகவல்கள் உரிய முறையில் கிடைக்க பெறவில்லை.
கோரும் தகவல்களை தட்டி கழிப்பது போல் தமக்கு கீழ் உள்ள அலுவலகங்களுக்கு திருப்பி விடுவதும் அவர்களின் தகவல்களில் போதிய தரவுகள் இல்லாமல் இருப்பதனாலும் கால தாமதத்தை வேண்டும் என்றே உருவாக்குகின்றார்கள் என எண்ணம் தோன்றுகின்றது.
அது தொடர்பில் மேன்முறையீடு செய்து தகவல்களை பெற்று கொள்வது என்பது மேலும் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடே இவ்வாறாக அதிகாரிகளின் மெத்தன போக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பிலான நம்பிகையீனத்தையே ஏற்படுத்துகின்றது.
தகவல் வழங்கும் அலுவலகர் நியமிக்கப்படவில்லை
இது தொடர்பில் அரச திணைக்களம் ஒன்றின் தகவல் வழங்கும் அலுவலகரிடம் கேட்ட போது, எமது திணைக்களத்தை பொறுத்த வரை தகவல் அலுவலகர் என எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. நிர்வாக உத்தியோகஸ்தரான (A.O) நானே தகவல்அலுவலகராக கடமையாற்றுகின்றேன். நான் எனது நிர்வாக உத்தியோகஸ்தருக்கு உரிய வேலைகளை செய்து கொண்டு தகவல் கோருபவர்களின் தகவல்களை சேகரித்து கொடுப்பது என்பது எனக்கு கடுமையான வேலை சுமையாக இருக்கின்றது.
தகவல்களை உரிய முறையில் சேகரித்து வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதனால் தகவல் கோருபவர்களுக்கு தகவல்களை தேடி எடுத்து கொடுப்பது என்பது கடினமான வேலையாகும். தினமும் தகவல்களை கோரி ஐந்தாறு பேர் விண்ணப்பிக்கின்றார்கள். அவர்களுக்கான தகவல்களை தேடி எடுப்பது இலகுவான விடயம் இல்லை. தனியே தகவல் அலுவலகராக மாத்திரம் கடமையாற்றினாலே தகவல்களை சேகரித்து வழங்குவது கடினமாக இருக்கும் சூழலில் நிர்வாக உத்தியோகஸ்தராக கடமையாற்றிகொண்டு தகவல்களை சேகரிப்பது என்பது கடுமையான வேலை பளுவாக இருக்கின்றது.
அதனால் தகவல் அலுவலகர் என புதிதாக ஒருவரை நியமிப்பதன் ஊடாகவே எமது வேலை பளு குறைவடையும் என்பதுடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்படும் தகவல்களை விரைந்து விண்ணப்பிப்பவர்கள் பெற முடியும் என தெரிவித்தார்.
ஆணைக்குழு மீது நம்பிக்கையீனம்
அதேவேளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களை வழங்க வில்லை எனில் நாம் ஆணைக்குழுவிடம் முறையிட முடியும். ஆனாலும் ஆணைக்குழுவிடம் முறையிடுவது தொடர்பிலும் பலருக்கு நம்பிக்கையீனம் உள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவிடம் முறையிட்ட ஒருவரிடம் கேட்ட போது,
எனக்கு தற்போது ஆணைக்குழு தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்பட்டு உள்ளது. அதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக விண்ணப்பித்து தகவல்களை பெறுவதனை கைவிட்டுள்ளேன்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடமாகாண சபையின் உறுப்பினர்களின் உதவியாளர்கள் தொடர்பிலான விபரங்களை வடமாகாண பேரவை செயலகத்தில் கோரினேன். அது தொடர்பில் தகவல் தர மறுத்தார்கள். அதனால் ஆணைக்குழுவுக்கு சென்றேன்.
ஆணைக்குழு விசாரணையின் போது, தகவலை கொடுக்க மறுக்க காரணம் யாதென கேட்ட போது அவர்கள் , மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமை என காரணம் கூறினார்கள். மாகாண சபைக்குள் நடைபெறும் விடயங்களில் தான் மாகாண சபை உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை உண்டு. இந்த தகவல்களை நீங்கள் வழங்கலாம் என கூறிய போது , அவர்கள் தகவல் தர சம்மதித்தார்கள். மாகாண சபை உறுப்பினர்களின் உதவியாளர்கள் தொடர்பிலான தகவல்கள் கூட கொழும்புக்கு ஆணைக்குழுவுக்கு சென்றே பெறவேண்டி உள்ளது.
ஜனாதிபதி செயலகம் தகவல் தர பின்னடிப்பு
அதேபோன்றே ஜனாதிபதி செயலகத்திடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே மற்றும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட எண்ணிக்கை மற்றும் வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட எண்ணிக்கை அதற்கான செலவு விபரங்கள் கேட்ட போது அவை தொடர்பில் தகவல்கள் வழங்கப்படவில்லை.
அது தொடர்பில் ஆணைக்குழுவிடம் முறையிட்டேன் . அது தொடர்பிலான விசாரணைகளின் போது மஹிந்த ராஜபக்சேவின் விஜயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் செயலகத்தில் பதிவில் இல்லை எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை பதியப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. மைத்திரி பால சிறிசேனாவின் தகவல்கள் தொடர்பில் விபரங்களை தருவதற்கு தொடர்ந்து இழுத்தடிப்பு செய்கின்றார்கள். அதற்கான நான் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் எனது சொந்த பணத்தில் கொழும்பு சென்று வந்தேன். ஒவ்வொரு தடவையும் போய் வரும் போதும் எனக்கு தங்குமிடம் , போக்குவரத்து, உணவு என ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகின்றது. அதனால் தற்போது ஆணைக்குழு மீது எனக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டு நான் செல்வதில்லை என தெரிவித்தார்.
தகவல் கோரியவரை அச்சுறுத்திய இராணுவம்
அதேபோன்று, ஆணைக்குழுவிடம் முறையிட்டமை தொடர்பில் மற்றுமொருவரிடம் கேட்ட போது, யாழ்ப்பாணத்தில் முப்படைகள் நடத்தும் உணவகங்கள் , விடுதிகள் தொடர்பிலான விபரம் மற்றும் அவற்றின் கணக்கறிக்கைகள் தொடர்பில் கேட்ட போது , கடற்படை மற்றும் விமான படை ஆகியன அவை தொடர்பிலான விபரங்களை தந்திருந்தன.
இராணுவத்தினரிடம் கேட்ட போது இராணுவத்தினர் அதற்கான தகவல்களை தருவதற்காக நான் இலங்கை பிரஜை என்பதனை அடையாளப்படுத்தும் முகமாக எனது அடையாள அட்டையின் பிரதியை கேட்டனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். தகவல் அறிய விண்ணப்பிக்கும் படிவத்தில் நான் இலங்கை பிரஜை என தெரிவித்து எனது அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிட்டு உள்ளேன்.என்பதை அவர்களுக்கு நினைவூட்டினேன். இருந்த போதிலும் அவர்கள் தகவல் தரவில்லை.
அது தொடர்பில் ஆணைக்குழுவிடம் முறையிட்டேன். அதன் விசாரணையின் போது, அந்த தகவல்களை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இராணுவ தரப்பால் கூறப்பட்டது. அதன் போது ஆணைக்குழு, கடற்படை , விமான படை ஆகியன தகவல்களை வழங்கியுள்ளனவே என கேட்ட போது, தகவல்களை வழங்க இரானுவத்தின சம்மதித்தனர்.
அது தொடர்பிலான அடுத்த விசாரணை அமர்வுக்கு சென்று விசாரணைக்காக நான் வெளியில் காத்திருந்த போது, எனக்கு அருகில் இராணுவத்தினர் இருந்து எனது கண்ணில் பட கூடியவாறு ஒரு கோவை ஒன்றினை தட்டி பார்த்தக்கொண்டு இருந்தார்கள். அதில் என்னுடைய புகைப்படம் ஒட்டப்பட்ட நிலையில் சிங்களத்தில் எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன.
அது தொடர்பில் விசாரணை அமர்வின் போது , ஆணைக்குழுவிடம் முறையிட்டேன். இராணுவத்தினரின் இந்த செயற்பாடு என்னை அச்சுறுத்தும் செயற்பாடாக உள்ளதாக. ஆணைக்குழு இராணுவ தரப்பினரை வெறுமன எச்சரித்தனர். அது தொடர்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
யாழில் இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவங்கள் , விடுதிகளின் தகவலுக்காக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எட்டுக்கும் மேற்பட்ட விசாரணை அமர்வுகளுக்கு கொழும்புக்கு சென்ற வந்த போதிலும் கூட அது தொடர்பிலான தகவல்கள் இராணுவத்தினரால் இன்னமும் வழங்கப்படவில்லை. தற்போது ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுக்கு விரக்தியின் உச்சத்தால் செல்வதில்லை என தெரிவித்தார்.
ஆணைக்குழு மீது அதிருப்தி
இவ்வாறாக ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுக்கு சென்று வந்தவர்கள் ஆணைக்குழு மீதான நம்பிக்கையினை இழந்துள்ளனர். அதேவேளை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பிலான அதிருப்திகளையும் வெளிப்படுத்தினார்கள்.
ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மம்பிலவும் , உறுப்பினர்களாக கிஷாலி பின்னரே ஜெயவர்த்தன , கலாநிதி. செல்வி திருச்சந்திரன் , எஸ். ஜி. புஞ்சிஹேவா, மற்றும் நீதிபதி ரோஹினி வெல்கம ஆகியோர் உள்ளனர் இவர்கள் ஐந்து பேரில் ஒருவரே தமிழ் மொழி தெரிந்தவராக உள்ளார். ஏனைய நால்வருக்கும் தமிழ் மொழி தெரியாது. மொழி பெயர்ப்பாளராக தற்போது உள்ளவர் விசாரணையின் போது எதிர்தரப்பினோ அல்லது ஆணைக்குழுவினரோ சொல்வதனை மொழி பெயர்க்காது. அதன் சாராம்சத்தையே மொழி பெயர்ப்பதனால் சில விடயங்கள் விடுபட்டு போகின்றன.
அதேவேளை விசாரணைகளின் முடிவும் கூட தகவல்களை வழங்குங்கள் என ஆணைக்குழு பரிந்துரைப்பதுடன் முடிவடைகின்றன. அதனால் அந்த தகவல்களை பெறுவதற்காக தமது சொந்த பணத்தில் பல தடவைகள் விசாரணைக்கு சென்று வர வேண்டிய தேவையுள்ளமையால் ஆணைக்குழு மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் வடக்கில் தகவல் வழங்கும் உத்தியோகஸ்தர்கள் என இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை. அதற்கு விரைந்து தீர்வினை காண்பதன் மூலமே மக்கள் இலகுவாக தகவல்களை அறிந்து கொள்ள கூடியவாறு இருக்கும்.
மாகாண ரீதியில் அலுவலகங்கள் திறக்கப்படுமா ?
அத்துடன் , ஆணைக்குழுவின் விசாரணைக்காக கொழும்புக்கு வந்து செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியமாக உள்ளது. அதற்கான செலவீனங்கள் , அலைச்சல் என்பவற்றால் பலர் அதனை விரும்புவதில்லை. அதனால் தகவல்கள் கொடுக்க மறுக்கப்பட்ட போதிலும் , அது தொடர்பில் முறையிட அவர்கள் தயாராக இல்லை. எனவே குறைந்தபட்சம் மாகாண ரீதியிலாவது ஆணைக்குழு தமது அலுவலகங்களை அமைக்க வேண்டும். அதன் ஊடாக ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
சட்டம் அமுலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் , ஆணைக்குழுவிற்கு என தனியே ஒரு அலுவலகம் இல்லாத நிலையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மகாநாட்டு மண்டபத்தில் அறை இலக்கம் 203 மற்றும் 204 இயங்கி வரும் நிலையில் மாகாண ரீதியில் அலுவலகம் அமைப்பது என்பது சாத்தியமா என்பது கேள்விக்குறியே
திறமான சட்டம் என பெருமைப்பட்டுக்கொண்டால் மாத்திரம் நன்மைகளை அடைந்து கொள்ள முடியாது. அந்த சட்டம் எவ்வளவு தூரத்திற்கு அமுலாக்கப்படுகின்றது என்பதிலும் அந்த சட்டம் மக்கள் மத்தியில் எவ்வளவு தூரத்திற்கு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதிலுமே அந்த சட்டத்தின் பெருமை தங்கி உள்ளது.
மயூரப்பிரியன்