மனுஸ் தீவில் வாழும் அகதிக்கு வழங்கப்பட்ட மிக முக்கிய விருது!

மனுஸ் தீவில் வாழும் அகதி ஒருவருக்கு மனித உரிமைக்கான முக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.

சூடான் பின்னணி கொண்ட அகதி Abdul Aziz Muhamatக்கு மனித உரிமைக்கான முக்கிய விருதான ‘2019 Martin Ennals Award Laureate’ விருது வழங்கப்பட்டுள்ளது.

கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் மனுஸ் தீவில் வாழ்ந்துவரும் Abdul Aziz Muhamat அங்கிருந்தபடியே சர்வதேச ஊடகங்களில் பேசிவந்தார்.

அதேநேரம் சமூக வலைத்தளங்களினூடாகவும் கடல்கடந்து வாழும் அகதிகள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் எழுதிவந்துள்ளார்.

குறித்த விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக மனுஸிலிருந்து ஜெனீவா அழைத்துச் செல்லப்பட்டுள்ள Abdul Aziz Muhamat அங்கிருந்து மீண்டும் மனுஸ் திரும்பவுள்ளார்.

குறித்த மனித உரிமை விருதினைப் பெற்றுக்கொள்வதற்கென சுவிஸ் அரசு Abdul Aziz Muhamatக்கு விசேட விசா ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

அத்துடன் அவருக்கு பப்புவா நியூகினி அரசு தற்காலிக கடவுச்சீட்டை வழங்கியிருந்தது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள மனித உரிமை விருது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள Abdul Aziz Muhamat“குறித்த விருதினை மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் வாழும் தனது நண்பர்கள் அனைவரின் சார்பிலும் பெற்றுக்கொள்வதாக” குறிப்பிட்டுள்ளார்.

மனுஸில் வாழும் மற்றுமொரு அகதியான குர்திஷ் பின்னணி கொண்ட பத்திரிகையாளர் Behrouz Boochani-க்கு விக்டோரிய அரசின் உயர் பெறுமதிமிக்க இலக்கிய விருது வழங்கப்பட்டு சில நாட்களில் அங்குள்ள மற்றுமொரு அகதியான Abdul Aziz Muhamat-க்கு மனித உரிமைக்கான முக்கிய விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.