3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது வீதி அபிவிருத்தி சம்மந்தமான விடயம் பேசப்படுகையில், ஐ றோட் செயற்றிட்டம் எதற்காக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது? என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனா்.

இதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி இந்த வருடம் ஆரம்பமாகும் என கூறியிருந்தார். அப்போது இந்த வருடம் என்றால் இந்த வருடத்தில் எப்போது ஆரம்பமாகும்? எந்த மாதத்தில் ஆரம்பமாகும்? என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

தொடா்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஐ றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறினார். இதனையடுத்து சபையிலிருந்த வீதி அபிவருத்தி அதிகாரசபையின் அதிகாரியுடன் பேசிய பிரதமா் ரணில் விக்கிரமசிங்க எதற்காக ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாவதற்கு காலதாமதமாகின்றது? என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்த வருடம் மே மாதமளவில் ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் உ றுதியளித்தனா்.  மேலும் ஐ றோட் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்றிட்டம் என்பதுடன், வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 206.08 கிலோ மீற்றா் நீளமான 53 வீதிகளும், உள்ளுராட்சி சபைகளுக்கு சொந்தமான 105.40 கிலோ மீற்றா் நீமான 116 வீதிகளும் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

இதற்காக 40 ஆயிரத்து 352 மில்லியன் ரூபாய் நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஒதுக்கீடு செய்யப்படும்.எனத் தெரிவித்தார்.