கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. சம்பந்தன் மூப்பின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் மு.கருணாநிதியும் மூப்பின் எல்லையில் நின்றபோது தி.மு.கவுக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் வாரிசு அரசியலில் ஊறிப்போன இந்தியாவில் வழக்கம்போல கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க. ஸ்டாலினின் பெயர் நீண்ட காலமாகவே அந்தப் பதவிக்கு அடிபட்டு வந்தது. இதற்கு ஏற்றாற்போன்று தி.மு.கவின் செயல் தலைவராக அவர் அந்தக் கட்சியின் தலைவரான அவரது தந்தையாரான கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.
கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் பொதுக்குழு அவரையே தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும். ஆனால் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அந்த நிலை காணப்படவில்லை. சம்பந்தனின் வாரிசாக எவருமே அடையாளம் காட்டப்படவுமில்லை.
தமிழ்மக்கள் வராலற்றில் மிக மோசமானதொரு காலகட்டத்திலுள்ளனர். போர் ஏற்படுத்திய வடுக்கள் இன்னமும் மறையவில்லை.பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இனப் பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வு அவர்களது கண்ணுக்கெட்டிய தொலை வில் கூடத் தென்படவில்லை.
சம்பந்தனின் சாணக்கியம் தொடருதல் வேண்டும்
சம்பந்தனின் சாணக்கியம் தற்போதுவரை கூட்டமைப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவருக்குப் பிறகு இது நீடிக்குமா? என்பதுதான் இன்று எழுந்துள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவண பவன் ஆஸ்ரேலியாவில் வைத்துக் பதிலளித்திருக்கிறார். சம்பந்தன் தமக்குள்ள அனுபவத்தைக் கொண்டு கூட்டமைப்பைச் சரியான திசையில் நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் அவர்போன்று செயற்பட முடியாது.
கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாகப் பலரும் பல்வேறு விதமாகப் பேசுவார்கள். ஆனால் பொதுக்குழுதான் இதை முடிவுசெய்ய வேண்டும். பொதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவர் கூறி யிருக்கிறார். ஆகவே கூட்டமைப்பின் பொதுக்குழு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
போர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது ஈழத் தமிழர்களின் தலைவராக மட்டுமன்றி உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் தலைவராகவும் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவரது ஆணையை ஏற்பதற்கும் அனைத்துத் தமிழர்களும் தயாராக இருந்தார்கள்.
இன்று அந்தப் பொறுப்பைப் கூட்ட மைப்பு ஏற்றுக்கொண்டிருக்கின்றது. சம்பந்தன் அதன் தலைவராக உள்ளார். தமிழர்கள் சம்பந்தனின் ஆணையை ஏற்று மைத்திரிக்கு வாக்களித்ததன் காரணமாகவே அவரால் அரச தலைவர் பதவியில் அமர முடிந்தது. இதன் மூலமாகத் தமிழர்களின் தலைவர் சம்பந்தனே என்பது நிரூபணமாகி யது. இதேநிலை தொடரவேண்டுமானால் சம்பந்தனுக்கு ஈடானதொரு தலைவரே தெரிவாக வேண்டும்.
பொதுக்குழுவுக்குபொறுப்புண்டு
எந்தக் கட்சியிலும் அதன் பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் கூட்டமைப்பின் அடுத்த தலைமையையும் அதன் பொதுக்குழுவே தீர்மானிக்க வேண்டும்.
வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்ததில் பொதுக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டதா? எனச் சிலர் கேள்வி எழுப்பக்கூடும். கூட்ட மைப்பின் தலைவர் என்ற வகையில் சம்பந்தனே அந்த முடிவை எடுத்தார். இதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் சம்பந்தனின் முடிவில் மாற்றம் ஏற்படவில்லை.
அவரது அரசியல் சாணக்கியம் விக்னேஸ்வரனின் விடயத்தில் தோல்வியையே தழுவியது.
தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான கூட்டமைப்பினர் தமது எதிர்காலத் தலைமை தொடர்பாகத் தீர்க்கமான முடிவொன்றை மேற்காள்ள வேண்டும். அந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரையே தெரிவுசெய்ய வேண்டும். ஏனெனில் இது தமிழர்களின் அரசியல் எதிர்காலம்.
நன்றி- உதயன்