ஆண்டுகளோ பத்து; வார்த்தைகளோ பொய்த்து!

“முப்பது ஆண்டுகாலப் போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கழிந்தும் தீர்வு வராதது வருத்தம்; இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன; அபிவிருத்தி அடைவதில் தோல்வி கண்டுள்ளோம்; செந்தணலின் மீதுள்ள சாம்பல் மீது நல்லிணக்கம் நிற்கின்றது; ஊழலை ஒழிக்க முடியாது உள்ளது; போதைப் பொருள் வணிகத்தை அழிக்க முடியாது உள்ளது”

இவ்வாறாக, இலங்கையின் 71ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரிசையாகத் தெரிவித்த உண்மையும் ஏமாற்றமும் கலந்த உரை இதுவாகும்.

முப்பது ஆண்டு கால யுத்தம் முடிந்த பிற்பாடான, பத்து ஆண்டு காலப்பகுதியில், நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபடக் கூடிய தீர்வுக்கு வரமுடியாமை, கவலைக்குரிய விடயம் என, அதனை மேலும் அழுத்தித் தெரிவித்து உள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்த 1948 காலப்பகுதிகளில், ஆசிய நாடுகளின் பட்டியலில் ஜப்பானின் ஆளுக்குரிய தலா வருமானம் 90 டொலராகவும் இலங்கையின் ஆளுக்குரிய தலா வருமானம் 89 டொலராகவும் காணப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது பெரிய தலா வருமானத்தைக் கொண்டிருந்த இலங்கை, இன்று இனப்பிரச்சினை காரணமாக, 26ஆவது இடத்துக்கு பின் நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறாக, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முகுகெலும்பாக மலையக மக்கள் இருந்து வருகின்றார்கள். இலங்கைத் தே(நீர்)யிலை என்றாலே அவர்களது ஞாபகமே மனதில் எழும். தாய் நாட்டுக்காக இரத்தம் சிந்தி உழைக்கின்றார்கள்.

ஆனால், இன்று அவர்கள் தினசரிக் கூலியாக வெறும் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்காகப் பல மாதங்களாகப் பல போராட்டங்களைப் பல்வேறு வடிவங்களில் நடத்தியும் இதுவரை தோல்வியே கண்டுள்ளார்கள்.

ஒரு கிலோ கிராம் அரிசி நூறு ரூபாய்; ஒரு தேங்காய் அறுபது ரூபாய்; ஒரு இறாத்தல் பாண் அறுபது ரூபாய் என நாளாந்த வாழ்க்கைச் செலவுகள் ரொக்கட் வேகத்தில் எகிறிக் கொண்டு செல்கின்றன.

மேலும் அவர்கள், இன்றும் பல நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த லயன் குடியிருப்புகளில், அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

“ஆயுதப் போரே, எமது வளத்தை வீணடிக்கின்றது. போர் நிறைவு பெற்ற பின்னர், நாடு அபிவிருத்தியில் வீறுநடை போடும்” என முன்னர் கூறப்பட்டது. ஆனால், ஆயிரம் ரூபாய்க்கு அல்லற்படும் அப்பாவிகளை, ஆறுதல் வார்த்தைகளால் மட்டுமே ஆற்றுப்படுத்தக் கூடியவர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

நம் ஊரில் வதியும் நடுத்தர வயதுள்ள முயற்சியாளர் ஒருவர் ‘அ’ நிதிநிறுவனத்திடம் பெற்ற கடனை அடைப்பதற்காக, ‘ஆ’ நிறுவனத்திடமும் ‘ஆ’ நிதிநிறுவனத்திடம் பெற்ற கடனை அடைப்பதற்கு, ‘இ’ நிறுவனத்திடமும் கடன் பெறுகின்றார். கடனை வழங்கிய நிறுவனங்களின் பெயர் மாறினாலும் அவர் பெற்ற கடன்கள் ஓயவில்லை. இதைப் போலவே, இந்நாட்டு நிதிநிலைவரங்களும் உள்ளன.

நம் நாட்டை, 1948ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி புரிந்து வருகின்ற கட்சிகள், என்ன விலையைக் கொடுத்தேனும் ஆட்சி அமைப்பதை இலக்காகக் (ஆசையாகக்) கொண்டே செயற்படுகின்றன. இதற்காக இவர்கள் முற்றிலும் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட மதத்தையும் இனத்தையும் மொழியையும் உபாயங்களாகக் கையாண்டனர்; கையிலெடுத்தனர். ஆட்சியாளர்கள் வெற்றி அடைகின்றனர். அப்பாவி மக்களோ தோல்வி அடைகின்றனர்.

நமது நாட்டில் வாகனங்களை இனங்காணும் வாகன இலக்கங்கள் எல்லாமே ஆங்கில எழுத்துகளிலேயே ஆரம்பிக்கின்றன. ஆனால், இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படையினரும் பயன்படுத்துகின்ற வாகனங்களின் இலக்கங்கள் சிங்கள எழுத்துகளிலேயே ஆரம்பிக்கின்றன.

இவ்வாறான நிலையில், இதை ஆட்சியாளர்கள் நம் நாட்டின் அனைவருக்கும் பொதுவான மொழியான ஆங்கில மொழிக்கு மாற்ற ஏன் இன்னமும் விரும்ப(முயல)வில்லை. இதன் மூலம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது என ஏன் பெரும்பான்மையின மக்கள் சிந்திக்கவில்லை. இலங்கைத்தீவில் மொழிப்பாகுபாடு தொடர்ந்தும் நிலவுகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு அல்லவா?

அன்று பெரும்பான்மையின மக்களுக்கு புலிப்பூச்சாண்டிக் காட்சி ஆட்சியாளர்களால் காண்பிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க புலிகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் எனவும் பரப்புரை செய்யப்பட்டது. அவர்களும் அதனை முழுமையாக நம்பினார்கள்.

இன்று நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை நோக்கி ஏராளமான பெரும்பான்மையின மக்கள் நாளாந்தம் படையெடுக்கின்றனர். உல்லாசப் பயணிகளாகச் சுற்றுலா வருகின்றார்கள். அவர்கள் தனியே நயினாதீவு நாகவிகாரைக்கும் காரைநகர் கசூரினா கடற்கரைக்கும் மட்டும் சென்று விட்டு தங்கள் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது.

வெறும் அனுமானங்களுடன் வராது, தமிழ் மக்களது ஆதங்கங்களையும் ஆத்திரங்களையும் அறிய வேண்டும். இனப்பிணக்கின் காரண காரியங்களைக் கண்டறிய முயல வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் என ஆட்சியாளர்கள் முழக்கம் இட்டாலும், இலங்கையில் தீர்வு காண முடியாத பிரச்சினையாக இனப்பிரச்சினையே உள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாள 72சதவீதம் பெரும்பான்மை சிங்கள மக்களும் 12சதவீதம் தமிழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கைப் படைகளில் 99சதவீதமானவர்கள் சிங்கள மக்கள் ஆவர். தமிழ்ப் போராளிகளில் 99சதவீதமானவர்கள் தமிழ் மக்கள் இருந்தனர்.

ஆகவே, தமிழினம் தன்னிலும் பார்க்க ஆறு மடங்கு ஆளணிப்பலம் கூடிய ஒரு நாட்டு அரசாங்கத்துடன் போரிட்டது. இது ஏன் எனப் பெரும்பான்மை இன மக்கள் சிந்திக்க வேண்டும். தன் மீதான அடக்குமுறை எண்ணிலடங்காத முறையில் அதிகரிக்க அதிகரிக்க தமிழ் இனம் வேறு வழியின்றி தேர்ந்தெடுத்த பாதையே ஆயுதப் போராட்டம் என விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களது மனங்களை நாடி பிடித்துப் பார்க்க வேண்டும். தமிழ் மக்கள் என்ன மன நிலையில் உள்ளார்கள் என அவர்களுடன் நேரடியாக உரையாடி அறிந்து கொள்ள வேண்டும். சமாதானத்துக்கான யுத்தம் அவர்கள் மீது ஏற்படுத்திய கோர வடுக்களைக் காண வேண்டும்.

இனப்பிணக்கால் ஏற்படுத்தப்பட்ட யுத்தம் 90,000 விதவைகளை தமிழ்ப்பகுதிகளில் உருவாக்கியிருப்பதையும் அவர்கள், தங்களது பொருளாதார மேம்பாடு கருதி நுண்நிதிக் கடன்கள் பெற்று, அதன் மூலம் பெரும் துன்பங்கள் அனுபவிப்பதையும் அறிய வேண்டும்.

பக்தர் இல்லாத இடங்களில் புத்தர் வந்து குடியேறுவதைக் காண வேண்டும். தமது பகுதிகளிலும் புத்தர் குடியேறி, தமது பகுதிகளும் கபளீகரம் செய்யப்பட்டு விடும் என, உள்ளூர் மக்கள் உள்ளூரப் பயத்துடன் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருவரது சுதந்திரத்தின் பிறப்பிடமே, அடிப்படையில் தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பை உணரும் சூழலே ஆகும். இவ்வாறான நிலையில் பெற்றோர்களால் கைவிடப்பட்டு (ஆட்சியாளர்கள்) தத்தெடுக்கக் கூட ஆட்களற்று அநாதைகளாக இருக்கும் தமிழ் மக்களது உணர்வுகள் உணரப்பட வேண்டும். காலங்கள் போனாலும் காயங்கள் ஆறாது; வெந்தணலில் வேகும் மக்களைக் காண வேண்டும்.

அவற்றை தமது மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவற்றை அப்படியே படம் பிடித்துக் காட்ட வேண்டும். இவற்றை கடந்த பத்து ஆண்டுகளாகப் பெரும்பான்மையின மக்கள் காத்திரமான முறையில் முன்னெடுக்கவில்லை என்றே கூறலாம்.

சில முற்போக்கான சக்திகள் இவற்றை முன்னெடுத்தாலும் அவர்களது குரல் தெற்கில் ஓங்கி ஒலிக்கவில்லை. அவர்களது குரல், குரலற்றுக் கிடக்கும் சகோதர மொழி பேசுகின்ற தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான விளைவுகளைப் பெற்றுத் தரவில்லை.

ஆகவே தமிழர் பிரதேசங்களுக்கு வந்து பெற்றுக் கொண்ட தகவல்களை அறிவு பூர்வமாக தங்களது பிரதேச மக்களுடன் பகிர்ந்து செயல் வடிவம் கொடுக்க வேண்டும். இது மாற்ற (தீர்க்க) முடியாது எனக் கருதப்படும் இனப்பிணக்கில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

இன்றைய வாழ்க்கை முறையில் நபரோ அன்றி நாடுகளோ தனித்து இயங்க முடியாது. இன்று நம்நாட்டின் மீது சர்வதேச நாடுகளது அழுத்தங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஜெனீவாவில் எத்தகைய தீர்மானங்கள் எடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என வீர வசனங்கள் பேசி என்ன பலன் கிடைக்கப் போகின்றது? உனக்கு நாடு என்ன செய்தது என்பதை விடுத்து, இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதே உயர்வான மொழி ஆகும்.

இவ்வாறாக, கடந்த பத்து ஆண்டுகளில் பாதிக் காலங்கள் ஆட்சி புரிந்த அப்போதைய ஜனாதிபதியும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்தவும் மீதிக் காலங்கள் ஆட்சி புரிகின்ற மைத்திரியும் இந்நாட்டின் சமபிரஜைகளான தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது? தமிழ் மக்களது நிலையில் இருந்து நோக்குகையில் ஒன்றுமில்லை. வெறுமை மாத்திரமே குடிகொள்கின்றது.

காரை துர்க்கா